‘காசு வேண்டாம் – நீதியே வேண்டும்’ – நீதி அமைச்சரின் திட்டத்துக்கு எதிர்ப்பு

” ஒரு இலட்சம் ரூபாவையும், சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதி அமைச்சர் அலி சப்ரி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.” – என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.  

காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் பிரகாரம், காணாமல்போன நபர்கள் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு, இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்டு, காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை பெற்றுள்ள காணாமல்போனவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு ஒருமுறை மட்டும் ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும். 

குடும்ப மீள்வாழ்வுக்காகவும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்துள்ளார்.

காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு 25 விசாரணைக்குழுக்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே புதிய யோசனைக்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

“நீதி அமைச்சரின் நடமாடும் சேவையில் காணாமல்போனோருக்கான அலுவலகம் வேண்டாம் என நாங்கள் கூறியிருந்தோம். இழப்பீடோ, மரணச்சான்றிதழோ தேவையில்லை எனக் கூறியிருந்தோம்.

அப்படியிருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீது திடீரென ஏன் அக்கறை வருகின்றது. ஒரு இலட்சம் ரூபா நிதியை எமது உறவுகளுக்கு வழங்கி அந்த நிதியில் வாழ்க்கைச் செலவைக் கட்டியெழுப்ப முடியுமா? இந்த நிதியில் எமது உறவுகள் வாழ முடியுமா? நீதிக்காக இதுவரை காலமும் நாம் போராடிக் கொண்டிருந்தோமே தவிர ஒரு இலட்சம் ரூபாவுக்காகப் போராடவில்லை.

போர் முடிவடைந்து 13 வருடங்களைக் கடந்தும் எமது உறவுகளைத்தான் தேடிக்கொண்டிருக்கின்றோம். உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கி உறவுகளைத் திருப்திப்படுத்துவதாக நீதி அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கின்றார். எமது உறவுகள் நிதிக்காகப் போராடவில்லை; நீதிக்காகவே போராடுகின்றோம்” – என்றார். 

Leave a Reply