காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (15.03. 2022) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்போதே அமைச்சர் டலஸ் மேற்படி தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2016 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் பிரகாரம், காணாமல்போன நபர்கள் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு, இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்டு, காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை பெற்றுள்ள காணாமல்போனவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு ஒருமுறை மட்டும் ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்.
குடும்ப மீள்வாழ்வுக்காகவும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்துள்ளார்.
காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு 25 விசாரணைக்குழுக்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.” – என்றார்.
