” குடும்ப ஆட்சி நடக்கும் இந்த அரசின்கீழ் தேசிய அரசு சாத்தியப்படாது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (14.03.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” தேசிய அரசமைக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கூறவில்லை .மாறாக தேசிய வேலைத்திட்டம் பற்றியே அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த நாட்டில் குடும்ப ஆட்சியே நிலவுகின்றது. அங்கு ஏனையோரின் கருத்துக்கு இடமில்லை. அதனால்தான் விமல், கம்மன்பில போன்றவர்கள் வெளியேறியுள்ளனர். குடும்ப ஆட்சி நடக்கும் சூழ்நிலையில் தேசிய அரசு சாத்தியப்படாது.” – என்றும் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பியும் தேசிய அரசு தொடர்பில் இன்று கருத்து வெளியிட்டார்.
” இந்த அரசில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தனக்கான பெறும்பான்மை பலம் இல்லாமல் போய்விடும் என்பதால் எதிரணி உறுப்பினர்களை வளைத்துப்போடவே தேசிய அரசமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. எனினும், தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. அரசில் இணைய எதிரணிகள் மறுப்பு தெரிவித்துள்ளன. ” – என்றார் உதய கம்மன்பில.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட மேலும் சில கட்சிகள் தேசிய அரசுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
