தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு கிடைப்பதற்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். அதேபோல புதிய அரசமைப்பு விடயத்திலும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார் இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர், ஜுலி சங்.
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (09.03.2022) கொழும்பில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
இதன்போது அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், நீதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என்பதை அமெரிக்க தூதுவர் டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
” தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் உறுதிமொழிகள் நீண்டகாலமாக மீறப்பட்டுவருகின்றன. இன்னமும் முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. 13 இருந்தாலும் அது முமுமையாக நடைமுறைக்கு வரவில்லை. ஆட்சிக்குவரும் அரசுகள் பேச்சு நடத்தினாலும், செயற்பாடு என்பது இல்லை.
தற்போதைய அரசும் தீர்வு விடயத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஜனாதிபதியை சந்திக்க நேரம் கோரியும் அது வழங்கப்படவில்லை. எனவே, சர்வதேசத்தின் பங்களிப்புடனேயே தீர்வு சாத்தியம் என நாம் கருதுகின்றோம். குறிப்பாக இது விடயத்தில் அமெரிக்காவின் கூடுதல் அழுத்தம் அவசியம்.” – என்று கூட்டமைப்பின் தலைவர், அமெரிக்க தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க அங்கம் வகிக்கின்றமை திருப்தியளிக்கின்றது எனவும், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களிலும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்,
” தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெற்றிக்கொள்வதில் அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பும், உதவிகளும் வழங்கப்படும். அதேபோல அரசியல் தீர்வு விடயத்திலும், புதிய அரசமைப்பு உருவாக்கத்திலும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.
