” இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசமைப்பொன்றை உருவாக்கினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.” – என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்களுக்கும், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கும் இடையிலான சந்திப்பின்போதே, ஆணையாளர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த தகவலை நிதி அமைச்சர் சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை முன்னெடுத்துள்ள முயற்சி சிறந்தது என்றபோதிலும், அச்சட்டத்தில் மேலும் பல மாற்றங்கள் அவசியம் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசு எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பில் இலங்கை தரப்பில், ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெறவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையால் முன்னெடுக்கப்படும் உள்ளக நடவடிக்கைகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஒத்துழைப்பு நல்க வேண்டும், எனவே, வெளியக அழுத்தங்கள் அவசியமற்றது எனவும் இலங்கை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையில் பயங்கரவாத தடைச்சடடம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் வலியுறுத்தியுள்ளனர்.
