You are currently viewing ‘பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம்’ – கிழக்கிலும் தீர்மானம்

‘பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம்’ – கிழக்கிலும் தீர்மானம்

நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கல்முனை மாநகர சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

இப்படியானதொரு தீர்மானத்தை வடக்கில் யாழ். மாநகரசபை நிறைவேற்றிய நிலையிலேயே, கிழக்கில் கல்முனை மாநகரசபையும் நிறைவேற்றியுள்ளது.  

கல்முனை மாநகர சபையின் 47ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று (28.02.2022) பிற்பகல் இடம்பெற்றது. 

இதன்போது மேற்படி பிரேரணையை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் சமர்ப்பித்திருந்தார். இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் வழிமொழிந்தார்.  

இதையடுத்து மாநகர மேயர் உட்பட உறுப்பினர்கள் பலரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கருத்துரைத்தனர்.

இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி எவ்வித குற்றமும் இழைக்காத அப்பாவி தமிழ், முஸ்லிம் இளைஞர்களும், புத்திஜீவிகளும் கைதுசெய்யப்பட்டு, வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனர் என்று இதன்போது அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. 

அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிஸார் இப்பிரேரணைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நிலையில், சபைக்குச் சமூகமளித்திருந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 

Leave a Reply