You are currently viewing பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க சிங்கள, முஸ்லிம் மக்களும் ஆதரவு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க சிங்கள, முஸ்லிம் மக்களும் ஆதரவு

” பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என சிங்கள மற்றும் முஸ்லிம் சகோதரர்களும் தற்போது வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். எனவே, கால அவகாசம் கோராமல் அச்சட்டத்தை அரசு உடன் நீக்க வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்தார். 

நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துசெய்யுமாறுகோரி நாடு தழுவிய ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையெழுத்து வேட்டை நடத்திவருகின்றது. இந்த மகஜரில் கையொப்பமிட்டு பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். 

மட்டக்களப்பில் நேற்று (27.02.2022) கையெழுத்து திரட்டப்பட்டதுடன், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.  

இதன்போது கருத்து வெளியிட்ட இரா. சாணக்கியன் எம்.பி. கூறியவை வருமாறு, 

” பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தமிழ் மக்கள் மட்டுமே போராடிவந்த நிலையில் தற்போது முஸ்லிம் மற்றும் சிங்கள சகோதரர்களும் அதற்கு பேராதரவை வழங்கிவருகின்றனர். வீதியில் இறங்கி போராடுகின்றனர். இச்சட்டம் நீக்கப்படும்வரை எமது போராட்டம் எதோவொரு விதத்தில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.   

உடனடியாக இதனை செய்ய முடியாது, கால அவகாசம் வேண்டுமென நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அவரின் இக்கூற்றை ஏற்கமுடியாது. கால அவகாசம் எல்லாம் வேண்டாம், கொடூரச் சட்டமான பயங்கரவாத தடைச்சட்டம் உடன் நீக்கப்பட வேண்டும்.” – என்றார் சாணக்கியன்.  

Leave a Reply