You are currently viewing   ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இரட்டை நிலைப்பாட்டில்’ – இலங்கை சாடல்  

  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இரட்டை நிலைப்பாட்டில்’ – இலங்கை சாடல்  

 வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக உள்ளக பொறிமுறையின் பிரகாரம் அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொள்ளும். மாறாக  வெளியக பொறிமுறையை ஒருபோதும் ஏற்காது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு இது பற்றி தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.” என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல்  ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். 

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (26.02.20222) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,  

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான அறிக்கை மட்டுமே , மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்படும். புதிதாக பிரேரணை  முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படமாட்டாது. 

மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் உள்ள உள்ளடக்கங்கள் தொடர்பில் எமக்கு தெரியும். அவற்றுக்கு உரிய வகையில் எமது தரப்பு பதில்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.  எம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்களை அவர் ஏற்றுள்ளாரா அல்லது திருத்தங்களின்றி அறிக்கையை முன்வைப்பாரா என்பதை அறிய காத்திருக்கின்றோம்.

மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ள அந்த அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறும். இதன்போது இலங்கைக்காக நட்பு நாடுகள் குரல் கொடுக்கும் என நம்புகின்றோம். பெரும்பாலான நாடுகள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளன. கூட்டத்தொடரை எதிர்கொள்ள எல்லா விதத்திலும் நாமும் தயார் நிலையிலேயே இருக்கின்றோம்.

மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையில் 95 வீதமானவை, உள்ளக அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவையாகவே இருக்கின்றன.  எமது நாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார். நாடாளுமன்றம் இருக்கின்றது. அமைச்சரவை செயற்படுகின்றது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனநாயக அரசொன்று இருக்கின்றது. எனவே, நாடு தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை அரசுக்கு இருக்க வேண்டும். எனவே, இவை தொடர்பில் ஜெனிவாவில் கேள்வி எழுப்பட்டால் அதில் பிரச்சினை உள்ளது. எனவே, உள்ளக அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்புவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல எனவும், அது தங்களது அதிகார எல்லைக்கு உட்படாத விடயமெனவும்  மனித உரிமைகள் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.

புலிகள் அமைப்பால் எமது நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலாலும் தாக்கம் ஏற்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட நாட்டை இலக்குவைத்து ஏன் இப்படியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன எனவும் நாம் கேள்வி எழுப்பியுள்ளோம்.  அது பெரும் அநீதியும்கூட. நாம்  பயங்கரவாதிகளை ஒழித்த நாடாகும்.  வாழும் உரிமையை உறுதிப்படுத்திய நாடாகும். இலங்கை தொடர்பில் புதிய புதிய பிரச்சினைகள் பற்றியே கேள்வி எழுப்படுகின்றது. போர்காலம் பற்றி கேள்வி எழுப்படுவது குறைவடைந்துள்ளது. ஏனெனில் அப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. சிற்சில பிரச்சினைகள் மட்டுமே உள்ளன. அவற்றுக்கும் தீர்வு வழங்கவே அரசு முயற்சிக்கின்றது. சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காக அல்ல, எமது நாட்டு மக்களுக்காகவும், அமைதிக்காகவுமே நாம் இவற்றை செய்கின்றோம். 

சிறிய நாடான இலங்கை தொடர்பில் ஒரு விதத்திலும், மனித உரிமைகளை அப்பட்டமாகமீறும் நாடுகள் தொடர்பிலும் வேறு விதத்திலுமான அணுகுமுறையே கையாளப்படுகின்றது. இதுதான் இரட்டை நிலைப்பாடு. அத்துடன், எமது நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரவாத அமைப்பு தொடர்பில் கதைக்கப்படுவில்லை. அது தவறான முன்னுதாரணமாகும்.  

இலங்கையானது ஐ.நா. சாசனத்தின் பிரகாரம் செயற்படும் நாடு. எனவே, உலக அமைதி மற்றும் எமது நாட்டு அமைதி ஆகியவற்றுக்காக செய்யவேண்டியவற்றை கட்டாயம் செய்ய வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் வழங்கிய இனை அனுசரணையில் இருந்து விலவதாக 2020 இல் நாம் அறிவித்தோம். இவ்வாறு விலகினாலும் இலங்கையில் அமைதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தோம். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது.  காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு பணியகம் உட்பட ஐந்து அலுவலகங்கள் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு அரச தரப்பில் இருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது.

நாம் வெளியாக பொறிமுறைக்கு ஒருபோதும் உடன்படமாட்டோம். ஐ.நா. சாசனம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முரண். உள்ளக பொறிமுறைகள் சிறப்பாக நடைபெறும்போது, வெளியக பொறிமுறை. தெளிவாக அறிவித்துள்ளோம். அமைதிக்காக உடன்படமுடியாது.   

அதேவேளை, இலங்கையில் இனக்குழுமமொன்றை இலக்குவைத்தோ அல்லது கட்சியொன்றை இலக்குவைத்தோ மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அல்ல இது. இலங்கையை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி நடவடிக்கையாகும். எனவே, இவ்வாறான பிரச்சினைகளை ஐக்கியமாகவே நாம் எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் தீர்வைக்காண முடியும். ஆனால் இலங்கை தண்டிக்கப்பட வேண்டும் என ஒரு சிலர் கருதுகின்றனர். சிலவேளை, ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை இல்லாமல்போகும் என வைத்துக்கொள்வோம், அதன்மூலம்

மீன்பிடி, ஆடைக்கைத்தொழில் மற்றும் விவசாயம் ஆகிய மூன்று துறைகளில் உள்ளவர்களுக்கே பெரிதும் பாதிப்பு ஏற்படும். அரசுக்கும் தாக்கம் ஏற்படும். எனவே, இப்படியான கோரிக்கையை விடுப்பவர்கள் நாட்டுக்கு துரோகம் இழைக்கின்றனர்.” – என்றார்.