பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ். மாநகரசபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நேற்று (24.02.2022) நடைபெற்றது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர், சொலமன் சூ சிறிலால் மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
” நாட்டில் அமுலில் உள்ள கொடூரமான அதேபோல இன ரீதியில் வஞ்சிக்கும் சட்டமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகின்றது.
எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை முன்வைக்கும் விதமாகவும் இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது.” – என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மாநகர முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.
” பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் என்பது ஏமாற்று நடவடிக்கையாகும். எனவே, அச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.” என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கையெழுத்து திரட்டப்பட்டுவருகின்றது.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்து கையொப்பம் இட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் பெப்ரவரி 10 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் இதுவரை 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
