தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக அன்று ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ வரைவை தயாரித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இன்று அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கள்ள மௌனம் காக்கின்றார் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரன் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (23.02.2022) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜெனிவாத் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர், வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன போன்ற விம்பமொன்றை உருவாக்குவதற்கு அரசு முயற்சிக்கின்றது.
அதுமட்டுமல்ல பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வியாக்கியானம் வழங்கிவருகின்றார். புதிய பயங்கரவாத தடைச்சட்டமென்பது ஓட்டை குடத்தில் நீர் நிரப்புவதுபோன்றதாகும். அதனால் மாற்றம் எதுவும் நடக்கப்போவதில்லை.
அரசமைப்பில் உள்ள விடயங்கள் பாதுகாக்கப்படும் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்கின்றனர். ஆனால் அரசமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டம் எவ்வாறு கையாளப்படுகின்றது, அதனை சின்னாபின்னமாக்கியுள்ளீர்கள்.
பேரினவாத நிலைப்பாட்டில் இருந்த சம்பிக்க ரணவக்க, அநுரகுமார திஸாநாயக்க போன்றவர்கள் 13 முழுமையாக அமுலாவதை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் பிராந்தியங்களின் ஒன்றியம் யாப்பை உருவாக்கிய பீரிஸ், கள்ள மௌனம் காக்கின்றார். இலங்கை சுபீட்சமான நாடாக மாறவேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.” – என்றார் கோவிந்தன் கருணாகரன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பங்காளிக்கட்சியாக அங்கம் வகிக்கும் ரெலொ கட்சியையே கருணாகரன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
