You are currently viewing ‘புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை சவாலுக்குட்படுத்தி 6 மனுக்கள்’

‘புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை சவாலுக்குட்படுத்தி 6 மனுக்கள்’

1979  ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்)  சட்டத்தில் திருத்தும் மேற்கொள்ளும் நோக்கில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  

பெப்ரவரி மாதத்துக்கான இரண்டாம்வார நாடாளுமன்றக்கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று கூடியபோது, சபாநாயகர் அறிவிப்புவேளையிலேயே மேற்படி தகவலை சபைக்கு அறிவித்தார் சபாநாயகர். 

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்)  சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம்  கடந்த 10 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.  

இந்நிலையிலேயே இச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் உட்பட மேலும் சில தரப்புகளில் இருந்து ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் பிரதிகள், நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

சட்டமூலமொன்றுக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர், அது முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அவ்வாறு முன்வைக்கப்படும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் 7 நாட்களுக்குள் நாடும் உரிமை இலங்கை பிரஜைகளுக்கு இருக்கின்றது.

அந்தவகையிலேயே மேற்படி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர், தனது சட்டவியாக்கியானத்தை உயர்நீதிமன்றம், சபாநாயகருக்கு அனுப்பிவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply