நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமென தென்னிலங்கையிலுள்ள சிரேஷ்ட இடதுசாரி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
‘திருத்தம்’ என்ற போர்வையில் அச்சட்டத்தை நீடித்துக்கொள்வதற்கு அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தோற்கடிக்க நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய ஆகியோர் அறைகூவல் விடுத்துள்ளனர்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸால் பெப்ரவரி 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
‘முன்பிருந்த சட்டத்துக்கும், புதிய சட்டத்துக்கும் இடையில் பாரிய மாறுபாடுகள் எதுவும் இல்லை.” என எதிரணிகளும் ,சிவில் அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் புதிய சட்டமூலத்துக்கு எதிராகவும், பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கையெழுத்து திரட்டப்பட்டுவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட சிரேஷ்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இடதுசாரி தலைவர்களும் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர்.
“ பயங்கரவாத மற்றும் அரச விரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவால் பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது நாட்டில் போர் இல்லை. 3 தசாப்தங்களில் சமூகத்தில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல ஜனநாயகத்தை ஒடுக்குவதற்கான கருவியாக இச்சட்டம் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது .எனவே, அது நீக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.” – எனவும் விக்கிரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
