” இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதே அதிகாரப்பகிர்வு இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால்தான் நாட்டில் போர் மூண்டது.” – என்று எதிரணி பிரதம கொறடாவும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
” எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த சந்தர்ப்பத்திலேயே அதிகாரப்பகிர்வு இடம்பெற்றிருக்க வேண்டும். இந்தியா உட்பட இந்த வலயத்திலுள்ள நாடுகளில், சுதந்திரம் கிடைத்த சந்தர்ப்பத்திலேயே அதிகாரம் பகிரப்பட்டது.
சோல்பரி பிரபு, இலங்கை வந்தபோது 3 பிராந்தியங்களுக்கு அதிகாரத்தை பகிர முற்பட்டார். அதற்கான விருப்பத்தையும் கொண்டிருந்தார். எனினும், அப்போதிருந்த அரசியல் சக்திகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடுத்து நிறுத்தின. அந்த தவறால்தான் எமது நாடு மூன்று தசாப்தகால போரை எதிர்கொண்டது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய நாடுகள் அதிகாரங்களைப் பகிர்ந்து, பிரச்சினையை தீர்த்துக்கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தன. நாம் அதனை செய்யவில்லை.” -எனவும் கவலை வெளியிட்டார் லக்ஷ்மன் கிரியல்ல.
அமரர் மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதத்தில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி விடயங்களை சுட்டிக்காட்டினார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வுடன் நிலையானதொரு அரசியல் தீர்வு எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அரசியல் தீர்வு காணப்பட்டால் மட்டுமே இலங்கை பொருளாதார ரீதியில் மேம்படும் என பல தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்கூட இந்த விடயத்தை சபையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கிரியல்ல வெளியிட்ட கருத்தும் முக்கியத்துவம் பெறுகின்றது.
அதுமட்டுமல்ல இலங்கை பொருளாதார ரீதியில் முன்னேறாமல் இருப்பதற்கு அதிகாரப் பகிர்வின்மையும் பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் மேற்படி விடயத்தை இவ்வாறு விவரித்துள்ளார்.
” இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு வேண்டும், அந்த தீர்வு சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என எமது மக்கள் தெளிவாக எடுத்துரைத்துவருகின்றனர். நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் அதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஆணை வழங்கிவருகின்றனர். எனவே, இது ஓரங்கட்டக்கூடிய விடயம் அல்ல.
எமது பகுதிகளுக்கு அபிவிருத்தி என்பதும் அவசியம். அந்த விடயத்தை நாம் மறுக்கவில்லை. அதைவிடவும் அரசியல் தீர்வே அடிப்படையாக உள்ளது.
கொரோனாவால் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக கூறுகின்றனர். இதற்கு கொரோனாவும் ஓர் காரணம். ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையும், அதனால் ஏற்பட்ட யுத்தம் உள்ளிட்ட காரணங்களால்தான் இந்நாட்டில் பொருளாதாரம் மேம்படவில்லை. பொருளாதார பின்னடைவுக்கு மூலக்காரணியே இந்த இனப்பிரச்சினைதான். பண்டா – செல்வா காலம் தொட்டு பல பேச்சுகள், போராட்டங்கள் என பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இருந்தும் நியாயமான தீர்வு இல்லை. அந்த தீர்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.” – என்றார்.
