You are currently viewing புதிய அரசமைப்புக்கு தெரிவுக்குழு கோருகிறது எதிரணி!

புதிய அரசமைப்புக்கு தெரிவுக்குழு கோருகிறது எதிரணி!

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே புதிய அரசமைப்பை இயற்றும் பணி முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  

அத்துடன், புதிய அரசமைப்புக்கான வரைவை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவானது, அரசின் தேவைக்கேற்பவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வெளிப்படை தன்மை இல்லை எனவும் எதிரணி சுட்டிக்காட்டியுள்ளது. 

1978 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசியலமைப்பில் உள்ள குறைப்பாடுகளை கண்டறித்து புதிய அரசியலமைப்புக்கான சட்டவரைவை தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான இக்குழுவானது,  அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் மின்னஞ்சல் மற்றும் பதிவுத்தபால்மூலம் கருத்துகளை பெற்றுக்கொண்டது. மேலதிக விளக்கங்களை நேரிலும் பெற்றது.

இவற்றை அடிப்படையாகக்கொண்டு புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பணிகள் முடிவடைந்த பின்னர் அது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். 

அதன்பின்னர் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

இவ்வாறு நாடாளுமன்றத்தின் சமர்ப்பிக்கப்பட முன்னர், அது பற்றி ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்பதே எதிரணியின் நிலைப்பாடாக உள்ளது. இதற்கு அரச தரப்பில் இருந்து இன்னும் உரிய பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.