You are currently viewing ‘இன நல்லிணக்கத்தை இலக்கு வைத்து 20 மும்மொழி பாடசாலைகள்

‘இன நல்லிணக்கத்தை இலக்கு வைத்து 20 மும்மொழி பாடசாலைகள்

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியின் ஓர் அங்கமாக இவ்வருடத்துக்குள் 20 மும்மொழி பாடசாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் ஊடாக இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேற்படி செலயகத்தின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். 

” நாட்டில் தற்போது 67 மும்மொழி பாடசாலைகள் உள்ளன. மேற்படி பாடசாலைகளை, எமது இலக்கை நோக்கி நகரக்கூடிய வகையில்  மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னர் புதிய மும்மொழி பாடசாலைகள் நிறுவப்படும். 

இதற்கமைய மத்திய மற்றும் மாகாண கல்வி அமைச்சுகளுடன் இணைந்து இவ்வருடத்துக்குள் புதிதாக 20 மும்மொழி பாடசாலைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது..

மாணவர்களுக்கு மும்மொழிகளை கற்பிப்பது மாத்திரம் மும்மொழி பாடசாலைகளின் நோக்கமாக இருக்காது. மும்மொழி பாடசாலைகளுக்கு அனைத்து இன மற்றும் மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் வருவார்கள்.  

இவ்வாறு மாறுபட்ட சூழல்களில் இருந்து வருபவர்களுக்கிடையில் இயல்பாகவே நல்லுறவை ஏற்படுத்துதல், புரிந்துணர்வை வளர்த்தல், இணைந்து செயற்படுதல், ஏனையவர்களின் இனம், மதம் மற்றும் கலாசார அம்சங்களுக்கும் மதிப்பளித்தல்,  நிகழ்வுகளை இணைந்து  கொண்டாடக்கூடிய நிலைமையை ஏற்படுத்தல் போன்றனவே  நோக்கமாக இருக்கின்றது.” – என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, நாட்டிலுள்ள தேசிய பல்கலைக்கழகங்களில் தேசிய ஒற்றுமை  தொடர்பிலான  நிலையங்களை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான விடயத்தை பல்கலைக்கழக பாடத் திட்டத்துக்குள் உள்வாங்குதல், தேசிய ஒற்றுமை தொடர்பில் கற்பிக்கக்கூடிய பேராசிரியர்களை உருவாக்கிக் கொள்ளுதல்,  இதன் நியாயத்தன்மையை சமூகமயப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் இதன்மூலம் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மோதல் முடிவடைந்த பின்னர் இனங்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்யெழுப்புவதற்கான தேவைப்பாடு எழும். அந்தவகையில் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வடுக்களை ஆற்றுப்படுத்துவதற்காக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் பரிந்துரைகளைப் பெறுவதற்காக ‘எல்எல்ஆர்சி’  எனப்படுகின்ற நல்லிணக்க ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. 

அந்த குழுவானது, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய அலுவலகம் அல்லது பிரிவொன்று அரசிடம் இருக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் முன்வைத்திருந்தது. அதற்கமையவே 2015 இல் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செலயகம் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Details
Title Description
Title Description