தேசிய அரசு தொடர்பில் நாம் கலந்துரையாடவில்லை. அவ்வாறானதொரு அரசை அமைக்க நாம் உடன்படமாட்டோம். அவ்வாறு தேசிய அரசு அமைந்தால்கூட அமைச்சு பதவிகளை வகிக்க மாட்டோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதுளை மாவட்ட மாநாடு கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (12.03.2022) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியவை வருமாறு,
” நாடு இன்று கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பில் அரசு கதைப்பதில்லை. எல்லா இடங்களிலும் கையேந்தும் நிலைமையே காணப்படுகின்றது. இதன்மூலம் கடன் சுமை அதிகரிக்கின்றது. ஒரு பில்லியன் டொலர்கூட எமது கைவசம் இல்லை. எனவே, உண்மை நிலைவரத்தை நாட்டு மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இன்று இலங்கைக்கு கடன் கொடுக்க எவரும் இல்லை. தனித்துவிடப்பட்டுள்ளோம். எனவே, வங்குரோத்து அடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் எமக்கு நிபந்தனைகள் விதிக்கப்படலாம். கடன்களை வழங்குவதற்காக எமது நாட்டு வளங்களைக் கோரலாம்.
தேசிய அரசுக்கு நாம் உடன்படவில்லை. அமைச்சர்களின் செலவீனங்களை குறைக்க வேண்டிய நேரத்தில் அதிகரிக்க இடமளிக்க முடியாது – ” என்றார் தயாசிறி ஜயசேகர.
