You are currently viewing மனித உரிமை மாநாட்டில் 5 விடயங்களை முன்வைத்த இலங்கை – 31 நாடுகள் ஆதரவு

மனித உரிமை மாநாட்டில் 5 விடயங்களை முன்வைத்த இலங்கை – 31 நாடுகள் ஆதரவு

 ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை இலக்கு வைக்கப்படுவதால், வாக்கெடுப்புகளின்போது சர்வதேச நாடுகள் மூன்று அணிகளாக பிளவுபடுகின்றன. அதனால் உள்நாட்டிலும் பிளவுகள் ஏற்படுகின்றன. பழைய புண் மீண்டும் தோண்டப்படுகின்றது. நல்லிணக்க முயற்சி என்பது இதுவல்ல. உள்ளக பொறிமுறை ஊடாகவே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். ” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.  

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று (09.03.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, ஜெனிவா மாநாட்டில் இடம்பெற்ற விடயங்கள்  தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 

அத்துடன், குறித்த மாநாட்டில் இலங்கைக்கு வெற்றி கிடைத்தாகவும் அவர் குறிப்பிட்டார். 

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,  

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை அனுமதித்தன. ஆதரவு தெரிவித்தன. இலங்கையின் நிலைப்பாடு  நியாயமானது, அதனை சர்வதேசம் ஏற்க வேண்டும் என மேற்படி நாடுகளின் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.  இது இலங்கை குழுவினர் கூட்டு முயற்சி – கூட்டு பொறுப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.  

ஐந்து பிரதான விடயங்களை முன்வைத்து, அது தொடர்பில் சர்வதேச நாடுகளிடம் நீதி கேட்டிருந்தேன்.  

முதலாவதாக  இன்றைய உலக நிலை பற்றி சிந்திக்க பாருங்கள். உலக நாடுகளில் பல பிரச்சினைகள் உள்ளன. ஐரோப்பாவில் பாரிய  இடம்பெயர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை விவகாரம் பற்றி மட்டும் ஏன் அதிக கவனம்  செலுத்தப்படுகின்றது? இலங்கையில் இன்று உள்ள பிரச்சினைதான் என்ன?  எமது நாடு தொடர்பில் கவனம் செலுத்த செலவிடப்படும் நேரம், வளம், முயற்சி ஆகியவற்றால் என்ன பயன் கிடைக்கப்போகின்றன? என கேட்டேன். இதற்கு வரவேற்பு கிடைத்தது. 

2 ஆவது விடயமாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களில் 80 வீதமானவை உள்ளிவகாரத்துடன் தொடர்புபட்டவை. அவை எந்த விதத்திலும் சர்வதேசத்துடன் தொடர்புபட்டவை அல்ல. இது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் விடயதானத்துக்கு அப்பாற்பட்ட விடயம் எனவும் சுட்டிக்காட்டினேன். தேவையற்ற தலையீடுகளை, கையடிப்புகளை சர்வதேச சமூகம் ஏற்கின்றதா என கேட்டேன்.   

மூன்றாவது விடயமாக, இலங்கையின் உள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றதெனில், பிற நாடுகளுக்கு ஏன் அந்த அணுகுமுறை கையாளப்படுவதில்லை, அதில் உள்ள விசேடத்தும் என்ன? எதற்காக இலங்கை மட்டும் இலக்கு வைக்கப்படுகின்றது?  இந்த அணுகுமுறையை ஏற்க முடியாது என அறிவித்தேன்.  

4 ஆவதாக உலகில் இன்று 50 வீதமானோருக்கு தடுப்பூசி இல்லை. இந்நிலையில் எதற்காக இலங்கையை இலக்கு வைத்து அதிகளவு பணம் செலவிடப்படுகின்றது எனவும் வினா எழுப்பினேன்.  

5 ஆவதாக இவ்வாறு செலவளிக்கப்படும் பணத்தால் பயன் உள்ளதா, வாக்கெடுப்பின்போது சர்வதேச மூன்று அணிகளாக பிளவுபடுகின்றன, 2012 இல் இருந்தே இது நடக்கின்றது. இலங்கைக்குள்ளும் பிளவு ஏற்படுகின்றது. பழைய புண் தோண்டப்படுகின்றது. இது நல்லிணக்கம் அல்ல. நல்லிணக்கம் என்பது முன்னோக்கி செல்வது. அதற்கான பொறிமுறை அந்நாட்டின் கலாசாரத்துக்கேற்பவே உருவாக்கப்பட வேண்டும். ஜெனிவா தயாரிப்பு ஏற்புடையவை அல்ல. 

45 நாடுகளில் 31 நாடுகள் இந்த தர்க்கத்தை ஏற்றன. இது எமது நாட்டுக்கு பாரிய வற்றியாகும்.” -என்றார். 

Leave a Reply