“ இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் எமக்கானதொரு பொருளாதாரக் கொள்கையோ அல்லது வெளிநாட்டுக் கொள்கையே நிலையானதாக இல்லை. எனவே, எமது நாட்டுக்குரிய அரசமைப்பொன்று இயற்றப்பட வேண்டும்.” – என்று தேசிய காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லா தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக்கட்சிகளின் விசேட கூட்டமொன்று இன்று (02.03.2022) கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அதாவுல்லா மேலும் கூறியவை வருமாறு,
“ இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் எமக்கே உரித்தான அரசமைப்பொன்று இல்லை. எமது நாட்டில் பெறுமதிமிக்க பல வளங்கள் இருந்தம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைத் திட்டமொன்று இல்லை.
எமது நாட்டு வளங்களை சூறையாடவே சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் படையெடுத்தனர். அதேபோல வளங்களை இலக்கு வைத்தே வெள்ளையர்களும் எமது நாட்டைக் கைப்பற்றினர். பிற நாடுகளில் இல்லாத பல செல்வங்கள் எமது நாட்டில் உள்ளன. அப்படி இருந்தும் டொலருக்காக நாம் கையேந்திக்கொண்டிருக்கின்றோம்.
டொலரை தேடி நாம் செல்ல வேண்டியதில்லை. எம்மை தேடி டொலர் வரும் விதத்தில் உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான கொள்கைத் திட்டம் அவசியம். அது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கையில் நான்கு இனத்தவர்களே வாழ்கின்றனர். எனவே, எமது நாடு ஏதோவொரு விதத்தில் குழப்புவதாக இருந்தால் இனங்களுக்கிடையில் திட்டமிட்ட அடிப்படையில் குரோதம் – குழப்பம் ஏற்படுத்தப்படுகின்றது. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஐக்கியமாக வாழ வேண்டும். அப்போது நாடு மேம்படும்.” – என்றும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா குறிப்பிட்டார்.
