” புதிய அரசமைப்பில் அதிகாரப்பகிர்வு என்ற விடயம் நீக்கப்பட்டுவிடுமா என்ற சந்தேகம் வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அதிகாரப்பகிர்வு என்பது கட்டாயம் தக்கவைக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.” – என்று அரச பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (28.02.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விவரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
” புதிய அரசமைப்பு இயற்றப்படும்போது, நாட்டில் தற்போது அமுலில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டம் உள்ளடக்கப்படமாட்டாது, அதிகாரப்பகிர்வு கைவிடப்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அந்நிலைமை ஏற்படுமானால் போராட்டம் வெடிக்கக்கூடும். எனவே, இந்த விடயத்தை மனதில் வைத்து அரசு செயற்பட வேண்டும்.
நாட்டில் பயங்கரவாதம் இருந்தபோதே பயங்கரவாத தடைச்சட்டம் தேவைப்பட்டது. தற்போது அந்தப்பிரச்சினை இல்லை. மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். எனவே, அச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.” – என்றார் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண.
