இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெப்ரவரி 23 ஆம் திகதி உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இறுதிக்கட்ட போரை வழிநடத்திய இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா,
“ இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை, சர்வதேச சட்டத்திட்டங்களுக்கமையவே போர் முன்னெடுக்கப்பட்டது. பின் களத்தில் இருந்த ஓரிருவர் குற்றம் இழைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கும் உள்ளது. அவ்வாறானவர்களுக்கு உள்ளக பொறிமுறையின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட வேண்டும்.” – என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன், “ இராணுவம் அநீதி இழைக்கவில்லையென்பதால்தான் 2010 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமக்கு அமோக ஆதரவை வழங்கினர்.” – எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
பொன்சேகாவின் இந்த அறிவிப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியவை வருமாறு,
” முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் பொன்சேகா வெளியிட்ட கருத்துகளை எம்மால் ஏற்கமுடியாது. போர் காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதனை வரவேற்கின்றோம்.
போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு என்ன நடந்த்து என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு சர்வதேச பங்களிப்புடனான விசாரணையே தேவை. அவ்வாறு இல்லாவிட்டால் பொறுப்புக்கூறல் என்பது உரிய வகையில் இடம்பெறாது. இதனையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.
அதேபோல இராணுவத்தளபதியாக செயற்பட்ட பொன்சேகா தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதனால்தான் அவர் இனப்படுகொலை நடைபெறவில்லையென கூறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
இனப்படுகொலையென கூறுவது, உயிர் கொலை இடம்பெற்றது மட்டுமல்ல. தமிழ் மக்களின் கலை, கலாச்சார விழுமியங்களை அழிப்பதும் , வாழும் உரிமையை மறுப்பதும், நிலங்களை பறிப்பதும், இனப் பரம்பலை மாற்றுவது போன்ற விடயங்களும் இனப்படுகொலைதான். இதனை யாரும் மறுக்க முடியாது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை போன்ற அமைப்புகளுக்கும் இது பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
போருக்கு பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்தமை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகும். அதனால்தான் தமிழ் மக்களும் அதை புரிந்துகொண்டு வாக்களித்தார்கள். “ – என்றார்.
