You are currently viewing ‘முழுமையான அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை’ – அமைச்சர் வாசு

‘முழுமையான அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை’ – அமைச்சர் வாசு

வடக்கிலே பிரிவினைவாத அரசியல் தலைதூக்கும்பட்சத்தில், அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தமுடியாமல்போகும் – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், மூத்த அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.   

திருகோணமலை மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர், நேற்று இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னர் அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றியும் கருத்து வெளியிட்டார்.   

” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டமென்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உடன்படிக்கையாகும். அந்த உடன்படிக்கையின் பிரகாரமே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. இணைந்திருந்த வடகிழக்கு மாகாணசபை, உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என பிரிக்கப்பட்டன. தற்போது அவை இரண்டும் இயங்குகின்றன. எனினும், அதிகாரம் தொடர்பிலான பிரச்சினையே உள்ளது.” – எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

அதேவேளை, இந்நாட்டில் வடக்கில் பிரிவினைவாத அரசியலின் தாக்கம் குறைவடயும்போது, அதிகாரங்களை அதிகரிக்க முடியும். ஆனால் பிரிவினைவாத தாக்கம் வடக்கில் அதிகரிக்கும்போது, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்படும்.” – எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சமகால அரசியலில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவரே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. இடதுசாரி கொள்கையுடனேயே அவரின் அரசியல் பயணமும் ஆரம்பமானது. தற்போதும் தன்னை இடதுசாரி தலைவரென விளித்துக்கொண்டாலும், அந்த கொள்கையில் அவர் நீடிக்கின்றாரா என்ற சந்தேகம் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

முன்னர் அதிகாரப்பகிர்வை முழுமையாக ஆதரித்து வந்த அவர்,  தற்போது மேற்படி பாணியிலேயே கருத்துகளை வெளியிட்டுவருகின்றார். 

Leave a Reply