” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் இந்தியாவின் தலையீட்டை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். எங்களின் இலக்கு ,கொள்கை, எதிர்பார்ப்பு ஒரு சமஷ்டி ரீதியிலான அதிகாரம் வடக்கு-கிழக்கிற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே ஆகம்.”
இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
விழுது சமூக மேம்பாட்டு அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரசியல்வாதிகளை அணுகும் நிகழ்வில் – “13ஆவது திருத்தச் சட்டத்தில் காணி,பொலிஸ் அதிகாரம் இருந்தும் – இல்லாத நிலை ” தொடர்பில் மக்களால் பதிலளிக்கையிலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இந்தியாவுக்கு கடிதம் எழுதி அனுப்பி , அவர்களுடன் உறவை ஏற்படுத்தக் காரணம்,
இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசை இது தொடர்பாக கேள்வி கேட்கும் தார்மீக உரிமை, சட்டரீதியான உரிமை இந்தியாவிடம் தான் இருக்கிறது. இந்தியா இது தொடர்பாக கோரிக்கை விடுத்தால் இலங்கை அரசு அதை செவிடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நாம் இந்தியாவைக் கோரியுள்ளோம்.
சட்டத்திலிருக்கும் ஒன்றை நடைமுறைப்படுத்தாதுள்ள இலங்கை அரசுக்கு நெருக்குதல்கள் ஏற்பட்டால், அதனை செய்ய முன்வருவார்கள் என்பது எனது கருத்து. நாமாக இலங்கை அரசிடம் கேட்டு அதனைப் பெற இயலாது. நான் முதலமைச்சராக இருக்கும் போது, இது தொடர்பாக அரசிடம் கோரியிருந்தேன். கொள்கையின்படி மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரம் கொடுக்க முடியாதென பதிலளித்தனர். கொள்கை அடிப்படையில் தர முடியாது என்றால் கொள்கை அடிப்படையில் சிந்தித்தே கையொப்பமிட்டிருக்க வேண்டும்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் போது கொள்கை பற்றி சிந்திக்காது கையொப்பமிட்டு, கொள்கை அடிப்படையில் முடியாதென்பது சரியானதல்ல. பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் கட்டாயம் தரப்பட வேண்டும்.இது சம்பந்தமாக இந்தியாவின் தலையீட்டை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்.
எங்களின் இலக்கு ,கொள்கை,எதிர்பார்ப்பு ஒரு சமஷ்டி ரீதியிலான அதிகாரம் வடக்கு-கிழக்கிற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே. ” – என்றார்.
