” ஒரு சமூகத்தின் விருப்பங்கள் அதி உச்சமானவையாக இருக்கக் கூடாது என்றில்லை. ஆனால் அவை ஏனைய இனத்தவர்களை, சமூகப் பிரிவினர்களை அச்சுறுத்தபவையாகவோ அல்லது ஆபத்துக்கு உள்ளாக்குபவையாகவோ அமையக் கூடாது.” – என்று இணைந்த கிழக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதாரஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற வரதாரஜப்பெருமாள், அங்கே, பொருளியல் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பின் அரசியற் போராட்டங்களில் பங்கு பற்றியதன் காரணமாக சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசினால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டார்
1983 செப்டம்பரில் மட்டக்களப்பு சிறை போராளிகளால் தாக்கப்பட்ட போது, வரதராஜப் பெருமாள் சிறையில் இருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். விடுதலைப் போராளி அமைப்புகள் 1985 ஆம் ஆண்டில் இலங்கை அரசுடன் நடத்திய திம்புப் பேச்சுவார்த்தைகளில் பெருமாளும் கலந்து கொண்டார்.
1987 ஆம் ஆண்டில் இந்திய இலங்கை உடன்பாட்டை அடுத்து வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை வரதராஜப் பெருமாள் ஏற்றுக் கொண்டார். டிசம்பர் 1988 முதல் மார்ச் 1990 வரை இப்பதவியை வகித்து வந்தார்.
அவரிடம், தமிழரின் அரசியலில் 13 தொடர்பான ய பேச்சுக்கள் இப்போது தீவிரமாகியுள்ளன. இதனுடைய இன்றைய நிலை மற்றும் எதிர்காலச் சாத்தியங்கள் குறித்து உங்களுடைய அபிப்பிராயம் என்ன என வினவியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
” பல கட்சிகள் கொண்ட ஜனநாயக அமைப்பில் எல்லோரும் எல்லா விடயங்களையும் ஏற்பார்கள் என்றில்லை. பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்வதையே மக்கள் அபிப்பிராயம் என்கிறோம். எனினும், பெரும்பான்மை என்ற வகையில் மேற்கொள்ளப்படும் இன மேலாதிக்கம் மற்றும் சாதி மேலாதிக்கங்கள் எதிர்க்கப்பட வேண்டியவை.
இங்கு தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார சமூக உரிமைகள் என வருகின்றபோது தமிழர்களிற் பெரும்பான்மையானவர்களின் அந்தந்த காலகட்டங்களிற் கொள்கின்ற – வெளிப்படுத்துகின்ற அபிலாஷைகளையே தமிழர்களின் அபிலாஷைகள் எனக் கொள்வதே சரியானதாகும். அதுவும் அந்த அபிலாஷைகள் நடைமுறைச் சூழலுக்கும் சாத்தியங்களுக்கும் பொருத்தமானவையாகவும் அமைய வேண்டும்.
ஒரு சமூகத்தின் விருப்பங்கள் அதி உச்சமானவையாக இருக்கக் கூடாது என்றில்லை. ஆனால் அவை ஏனைய இனத்தவர்களை, சமூகப் பிரிவினர்களை அச்சுறுத்தபவையாகவோ அல்லது ஆபத்துக்கு உள்ளாக்குபவையாகவோ அமையக் கூடாது. மேலும் அவற்றை அடைவதற்கு எந்தப் பாதைகளின் ஊடாக எத்தனை படி முறைகளினூடாக செல்ல வேண்டும் – செயற்பட வேண்டும் என்பவற்றை கவனத்திற் கொண்டு அரசியல் சமூக செயற் திட்டங்களை முன்னடுப்பதுவும் பிரதானமானதாகும்.
இங்கிருப்பது மக்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகம். எனவே இங்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை மட்டுமல்ல தமிழப் பேசும் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின்படி அமைந்த அதிகாரப் பகிர்வை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அது அவர்களின் விருப்ப வெளிப்பாடு மட்டும்தானா அல்லது அதை எப்படி சாதிக்கப் போகிறார்கள் என்ற கேள்விகளுக்கான விடைகளை பொறுத்திருந்தே பார்க்கலாம்.
13வது திருத்தத்தை நிராகரிப்பவர்கள் தமிழ் மக்களின் பெரும்பான்மையான பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறபோதே அந்த நிராகரிப்பு தமிழ் மக்களின் நிராகரிப்பாக அமையும். அந்த நிலைமை இப்போது இல்லை. ” – என்றார்.
