தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை விரைவில் முன்வைக்கப்படவுள்ளது.
இந்தத் தகவலை சபை முதலவரும், மேற்படி தெரிவுக்குழுவின் தலைவருமான அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
மேற்படி அறிக்கை வெளியான பின்னர் உள்ளாட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
” உள்ளாட்சிசபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு தெரிவுக்குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன்படி 30 வீதம் விகிதாசாரம் அடிப்படையிலும், 70 வீதம் தொகுதி அடிப்படையிலும் தேர்வு இடம்பெறும்.” எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பெண்கள் மற்றும் இளைஞர்களின் அங்கத்துவம் நிச்சயம் உறுதிப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தையும் அவர் வழங்கியுள்ளார்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காகவுமே தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது.
அதேவேளை, உள்ளாட்சிசபைகளின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடையவிருந்த நிலையில், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர், மேற்படி சபைகளின் பதவிகாலத்தை ஓராண்டுக்கு நீடித்தார். எனினும், தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும் என அவர் கருதும் பட்சத்தில் அதற்கான அறிவிப்பையும் விடுக்கலாம்.
இதற்கிடையில் உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்த தாம் தயார் என தேர்தல் ஆணைக்குழுவும் அறிவிப்பு விடுத்துள்ளது.
