வடமாகாணமான யாழ்ப்பாணத்தின் வடமராட்சியை பூர்வீகமாகக் கொண்ட நான் ரஞ்சித்ராஜ் குலகௌரி. தற்போது அரசியலில் பிரவேசித்துள்ள நான் ஆரம்ப காலம் முதலே சமூக சேவைகளில் ஆர்வம் காட்டியதுடன் பாடசாலைக் காலங்களில் விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உள்ளவராக இருந்திருக்கின்றேன். உயர்தரம் வரை கல்விகற்றதோடு உடல்நிலையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியாமல் போனது.
சமுகத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அநியாயங்களை வெளிக்கொணர வேண்டும் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும் என்ற நோக்கிலே எனது சமூக பணி தொடர்ந்தது. அரசியலை இலக்காகக் கொண்டு என்னுடைய சமூகப் பணி ஆரம்பமாகவில்லை. கடந்த காலங்களில் எமது சமூகத்திற்கு ஏற்பட்ட அடக்குமுறைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் அது தொடர்பில் ஆராய்ந்து வெளிப்படுத்தவே என்னுடைய சமூகப்பணி ஆரம்பமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
எமது சமூகத்தில் உள்ள 75 வீதமான பெண்கள் அவர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கின்றார்கள். சமூக ஆர்வலர்கள் அவர்களின் பிரச்சினைகளை வெளிகொணர்ந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
பெண்களின் வாழ்வாதாரம் பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. அவர்களின் முன்னேற்றத்திற்கு பெண்களின் தகுதிக்கேற்ப எவ்வாறான தொழில்வாய்ப்புக்களை அமைத்துக்கொடுத்தால் அவர்கள் முன்னேற்றம் காண்பார்கள் என்பதை இனங்காண வேண்டும். அத்தோடு அவர்களின் பாதுகபாப்பை சரியான முறையில் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களின் பிள்ளைகளும் சரியான பாதுகாப்போடும் கட்டுக்கோப்போடும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். கிராமிய வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட அவர்களுக்கு சட்டவிதிகள் வேறு விடயங்கள் தொடர்பில் பூரண தெளிவு இல்லை. அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவர்களுக்கான சட்ட உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இதுவரை காலமும் நான் மேற்கொண்ட சமூகப் பணிகளில் இருந்து பெண்கள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதை இனங்கண்டிருக்கின்றேன். நான் அரசியலுக்குள் பிரவேசித்த பிறகு பெண்களுக்காக இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும் என்ற விடயம் தெரிய வர அது தொடர்பில் தெளிவுபடுத்தி பின்னர் ஒரு சிலர் அவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு உரிமைகளை வென்றெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். கணவனைப் பிரிந்த பெண்களுக்கு இவ்வாறான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டதன் ஊடாக பராமரிப்பு பணத்தை பெற முடிந்திருக்கின்றமை இதற்கு கிடைத்த வெற்றியாகும்.
மகளிர் அமைப்புக்களுடன் இணைந்து பெண்களுக்கு கூட்டுத்தொழில் முயற்சியைப் பெற்றுக்கொடுக்க வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு நுன்கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சங்கத்தில் உள்ள பணத்தைப பொருத்து அவர்களுக்கான கடன்வசதிகளை வழங்க முடிந்துள்ளது. எமது சமூகப் பணியானது எமது பிரதேசத்தோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு ஒரு சில சந்தர்ப்பங்களில் வெளிமாவட்டங்களில் உள்ள உறவுகள், நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவையுடையோர் இனங்காணப்பட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஆவண செய்யப்பட்டிருக்கின்றன.
ஆரம்பத்தில் அரசியலில் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் அதற்கு மாற்றமாக ஏதோ ஒரு காரணத்தால் அரசியலுக்குள் பிரவேசித்த பின்னர் வாழ்க்கையில் அரைவாசியை அரசியல் ஊடாகவே சாதிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டுள்ளேன். தற்போது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் பிரதிநிதியாக எனது பயணம் சென்று கொண்டிருக்கின்றது
சபையைப் பொருத்தவரையில் கட்சிகள் பல இருந்தாலும் அனைத்து உறுப்பினர்களும் ஒரே குடும்பமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். மனுக்கள் சமர்ப்பிக்கப்படுகின்ற போது விவதாங்கள் இடம்பெற்றாலும் ஏகமனதான ஒரு தீர்மானத்திற்கு வருகின்ற மன நிலையிலே அனைத்து உறுப்பினர்களும் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடமாகும். தேர்தல் காலங்களில் ஒரு சிலர் தாக்குதல்களிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள் கட்சி ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டாலும் அவை ஊடாக என்னை வளர்த்துக்கொள்ள முடியுமாக இருந்திருக்கின்றது.
என்னுடைய அரசியல் பயணத்தில் 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொண்டேன். அதன் ஊடாக நான்காம் வட்டாரத்தில் போட்டியிட்டு அச்சுவேலி பிரதேச சபை உறுப்பினராக இருக்கின்றேன். என்னுடை சமூக சேவைகளை அவதானித்த எமது கட்சி பல தடவைகள் என்னிடம் அரசியலில் பிரவேசிக்குமாறு கேட்டிருந்தும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தேர்தல் காலத்தில் அந்தக் கட்சியில் இணைந்துகொள்ள வேண்டி ஏற்பட்டது. வேட்பாளர் பட்டியலில் இணைந்துகொள்வதில் சிக்கல் ஏதும் இருக்கவில்லை. பிரச்சார பணிகளின் போது எதிர்க்கட்சிகளின் சவால்கள் தான் அதிகமாக இருந்தது. கட்சி சார்பில் போட்டியிட்டு பின்னர் விகிதாரசார வேட்பாளராக பிரதேச சபைக்கு உள்வாங்கப்பட்டேன்.
இதுவரை காலமும் விகிதார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் என்று எந்தவொரு பாரபட்சமும் எமது சபையில் காட்டப்படுவதில்லை. அத்தோடு அனைவருக்கும் சம அளவிலே நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறைகள் எனக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது. அரசியலுக்குள் பிரவேசித்த பின்னரே அதிகமான செயலமர்வகளில் பங்குகொள்ள முடிந்தது. சட்ட ஒழுங்குகள், தலைமைத்துவப் பணி, பெண்கள் எதிர்நோக்குகின்ற சவால்களை எவ்வாறு வெற்றி கொள்வது என்பன தொடர்பில் அந்த செயலமர்வுகளில் எமக்கு தெளிவூட்டப்பட்டன.
எனது தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவுகள் அனைத்தையும் கட்சி பொறுப்பேற்றுக்கொண்டது. பிரச்சாரப் பணிகளுக்கு என்னுடைய சொந்த நிதி செலவிடப்படவில்லை. சபைக்கு உள்வாங்;ப்பட்ட போது சபை விடயங்கள் தொடர்பில் ஒரு சில விடயங்களை தெரிந்து வைத்திருந்தாலும் பல விடயங்களை பின்னர் தான் கற்றுக்கொள்ள முடிந்தது. அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய பயிற்சிகள் ஊடாக சபைகளில் இயங்குகின்ற குழுக்கள் தொடர்பாகவும் அந்தக் குழுக்களின் செயற்பாடுகள் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் தெளிவும் கிடைத்தது. எமது சபையில் உள்ள எட்டு பெண் உறுப்பினர்களும் ஒவ்வொரு குழுவிலும் அங்கம் வகித்துக்கொண்டிருக்கின்றோம்.
வருடாந்த பாதீட்டின் மூலம் மின் விளக்குகளை பொருத்தக்கூடியதாக இருந்தது. முன்பள்ளியை புனரமைத்து அதற்கு குடி நீர்வசதியைப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. அரசியலுக்குள் இருக்கின்ற பெண்களுக்குள் ஒற்றுமை வளர்க்கப்பட வேண்டும்.
இந்த நிலையில் அரசியலில் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல வேண்டும் என்ற ஆரவ்ம் இருக்கின்றது. அடுத்த கட்ட தேர்தலுக்கு செல்வது என்றால் அதற்கான ஆதரவு கிடைக்கும். கட்சித் தலைமையும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும். அது தொடர்பில் கட்சி பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடி இருக்கின்றது. தேசிய ரீதியிலான அரசியலுக்கு செல்வதற்கு முன் என்னையும் எனது சமூகத்தையும் வளர்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனக்குப் பின் திறமையானவர்களை இனம் கண்டு அவர்கiளை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.
அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது வழங்கப்படுகின்ற 25 வீத கோட்டா அதிகரிக்கப்பட வேண்டும் குறைந்தபட்சம் அது 40 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை. பாராளுமன்றத்தில் இருக்கின்ற பிரதிநிதிகள் அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும். சமூகத்தில் பெண்கள் முடிவெடுக்கின்ற போது அதை ஏற்றுக்கொள்கின்ற மனப்பான்மை குறைவாகவே இருக்கின்றது. அதனால் தன்னுடைய செயற்பாடுகளை முடக்கி வைத்திருக்கின்ற பல பெண்கள் இருக்கின்றார்கள் அவர்களின் திறமைகளும் ஆற்றல்களும் வெளிக்கொண்ரப்பட வேண்டும்.
அரசியலுக்குள் உள்வாங்கப்படுகின்ற பெண்கள் அவ்வாறு செயற்படுகின்ற போது அவர்களுக்கு அவப்பெயர்களை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றார்கள். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இல்லாமல் செய்தால் நிச்சயமாக அவர்களின் ஆற்றல்கள் சரியாக வெளிப்படும். அத்தோடு அரசியலுக்குள் உள்வாங்கப்படுகின்ற பெண்கள் சரி பிழைகளுக்கு அப்பால் முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனையோருக்காக எமது முடிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ளக்கூடாது.
(One Text Initiative நிறுவனத்தின்பெண்உள்ளூராட்சிஅதிகாரசபைஉறுப்பினர்களதுதிறன்அபிவிருத்திச்செயற்திட்டத்தின்ஒருஅங்கமாகஇதுதயாரிக்கப்பட்டது – இவ்ஆவணத்தைவெளியிடுவதற்குமேற்படிஉறுப்பினர்களின்அனுமதிபெறப்பட்டது.)
Details | ||
---|---|---|
![]() | Title Description | |
![]() | Title Description | |
![]() | Title Description | |
![]() | Title Description | |
![]() | Title Description | |