You are currently viewing தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்க: மேற்குலத்தை நாடும் தமிழ்க் கட்சிகள்

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்க: மேற்குலத்தை நாடும் தமிழ்க் கட்சிகள்

தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கூட்டாட்சி கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் தமிழரின் சுயநிர்ணய உரிமையையும், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதையும் உறுதிப்படுத்தும் ஆவணமொன்றை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிடமும் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாக டெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி, தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைக்குமாறு கோரி கடந்த 18ஆம் திகதி கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைக் கழகம் [TELO], தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு [புளொட்] இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி [ITAK], தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு [TPNA], ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி [EPRLF] மற்றும் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு [TNP] இந்த பொது ஆவணத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள், மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆகியன இணைந்து இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் பேசும் அனைத்துக் கட்சிகளுடனும் பொதுவான ஆவணமொன்றைத் தயாரிப்பதற்காகப் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தின.

கூட்டாட்சி முன்மொழிவுகள், வடக்கு கிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் இந்த ஆவணத்தில் சில கட்சிகள் கையெழுத்திட மறுத்துள்ளன.

மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, ஆகிய கட்சிகளும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அந்த ஆவணத்தில் கையெழுத்திட மறுத்துள்ளன. 

பொது ஆவணத்தில் கையொப்பமிடாத போதிலும், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அந்தக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை வலியுறுத்தி தமிழ் மக்களை நசுக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply