யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட வடுக்கள், தாக்கங்கள், இழப்புக்கள் என்பனவே என்னுடைய அரசியல் பிரவேசத்திற்குக் காணரமாக அமைந்தது.
நான் திருமதி மதினி நெல்சன். பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட நான் ஆரம்பக் கல்வியை யாழ் புனித தோமையர் ரோமன் கத்தோலிக்கப் பெண்கள் பாடசாலையிலும் உயர் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியிலும் பயின்றேன். நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக உயர் தரம் வரையில் மாத்திரமே கல்வி கற்க முடிந்தது. எனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். இலங்கையில் ஏற்பட்ட பிரசச்சினைகள் காரணமாக பல இழப்புக்களைச் சந்தித்துள்ளதோடு என்னுடைய ஒரு சகோதரனையும் இழந்திருக்கின்றேன். எனது அரசியல் பிரவேசத்திற்கு இவை எல்லாம் அடித்தளமாக இருந்தன.
சமூக செயற்பாடுகள் குறித்த அக்கறை எனக்கு ஆரம்பத்திலிருந்து என்னுள் வெளிப்பட்ட விடயம். எனது தந்தையிடமிருந்தும் குடும்பத்திடமிருந்தும் அந்தப் பக்குவம் எனக்கு வந்தது. அது அரசியல் என்று மாறும் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வேறு வேறு விடயங்கள் ஊடாக சமூகப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் அரசியல் பணிகளுக்குச் செல்லும் போது பல்வேறு விமர்சனங்களும் அநாவசிய செலவும் ஏற்படும் என்றும் கருத்துக்கள் கூறப்பட்டன. வீணான பழிச்சொற்கள், பொருத்தப்பாடற்ற செயல் என்கின்ற ஒரு பின்னூட்டல் தான் இது வரையும் நான் எதிர்நோக்கிய சவாலாகும். சமூகப் பணி சார்ந்த ஒரு பெண்ணாக அரசியல் பணி செய்வதற்கு 90 வீதமான ஒத்துழைப்பு எனக்குக் கிடைக்கவில்லை. எமது தாக்கங்களை புரிந்துகொண்ட ஒரு சில ஆண்கள் மாத்திரமே ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார்களே தவிர குடும்பத்தில் உள்ளவர்களிடமிருந்தும் பூரண ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. சாதாரணமாக ஒரு மாதர் சங்கம், நலன்புரிச் சங்கம் அல்லது தொண்டு நிறுவனங்கள் ஊடாக சமூகப் பணிகளை முன்னெடுப்பதை விரும்புகின்றார்களே தவிர அரசியல் ரீதியாக ஒத்துழைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
சமூகம் சார்ந்த அல்லது குடும்ப அமைப்பு சார்ந்தவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை அல்லது உதவிகளை பொருளாதார ரீதியில் செய்வதற்குப் பெண்கள் முடிவெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. குடும்பத்தில் எவ்வாறான வகிபாகங்களை வகித்திருந்தாலும் ‘நிதியைக் கையாள்வதற்கு பெண்களுக்குக் குடும்பத்தில் தனி அனுமதி பெற வேண்டியிருக்கின்றது’ அடுத்ததாக சமூகம் என்ற பார்வையில் அரசியல் ரீதியாக ஒரு முன்னெடுப்பை மேற்கொள்கின்ற போது ஒரு பெண்ணால் முன்வைக்கப்படுகின்ற முன்மொழிவுகளை அரசியல்வாதிகள் ஒரே கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, நட்பு வட்டார அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, அதற்குப் பெருமளவில் ஆர்வம் கொடுத்து நிறைவேற்ற விரும்புவதில்லை.
எமது சமூகத்தில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. பெண்களின் வருமானம், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், மற்றும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை சரியாக முன்னெடுத்தல், போன்ற விடயங்களில் பெண்களுக்கு அதிகமாக சவால்கள் இருக்கின்றன. போருக்குப் பின்னர் தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான சில உதவிகளை கட்டம் கட்டமாக செய்து வந்தமையால் அவர்கள் தன்னம்பிக்கை இழந்து விட்டார்கள். சில உதவிகள் கிடைக்கின்ற போது அதிகமான பெண்கள் தங்களின் சுய முயற்சிகளை கைவிட்டு விட்டார்கள். பெண்களுக்கு தேவையான அடிப்படைத் தளம் இல்லாமல் போனமை மற்றும் பெண்கள் மற்றவர்களின் பராமரிப்பின் கீழ் தங்கி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்கு எவரும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது.
ஆணில்லாத குடும்ங்களில் உள்ள பெண்களுக்கு பெண் தலைமைத்துவ குடும்பம் என்ற பட்டத்தைக் கொடுத்து ஏதேனும் தேவைகளுக்குச் செல்கின்ற பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் சமூகமாக எமது சமூகம் மாறியிருக்கின்றது. அதேநேரம், அவர்களிடம் பேரம் பேசுதல் அல்லது அவர்களின் தேவைகளை இழுத்தடிப்பு செய்தல் மற்றும் பலம் குன்றியவர்களாக இருக்கின்ற போது, அந்த விடயம் அந்தப் பெண்களுக்கு தேவையில்லை என்று ஆண்களே முடிவெடுத்துக்கொள்கின்றார்கள். ஆதலால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றார்கள். வெளிப்படையாக சொன்னால், பிள்ளைகள் உள்ள ஒரு தாய் தனது பிள்ளைகள் பட்டினியாக இருக்கின்ற போது தான் விபச்சாரியாக மாறுவேனோ என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றாள். அவ்வாறன சிந்தனைகளை அந்தத் தாய்க்கு கொடுக்கின்ற கொடிய சிந்தனையுள்ளவர்கள் இந்த சமூகத்தில் இருக்கின்றார்கள்.
இவ்வாறான பிரச்சிளைகளுக்குத் தீர்வாக சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் மாற்றமடைய வேண்டும். இதேவேளை சட்டம் சார்ந்த விடயங்களுக்கு நீதித்துறை அதிகாரிகளை அணுகி விடயங்களை சாதிக்க முயற்சிக்கின்ற போது, அங்கே நீதி கிடைப்பதில்லை. பெண்களை ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளில் பல தொண்டு நிறுவனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவ்வறானவர்களோடு சேர்ந்து நாங்கள் தற்போது இயங்க ஆரம்பித்திருக்கின்றோம். அதற்காக பெண்களின் அணியைத் திரட்டுகின்றோம். கிராமங்களில் உள்ள மாதர் சங்கங்கள் ஊடாக சிற்சில விடயங்களை மாத்திரம் முன்னெடுத்தோம். அடிப்படைத் தேவைகளை செய்துகொள்வதற்கு தயங்குகின்ற பெண்களை ஊக்கப்படுத்துகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பெண்களின் அரசியல் விடயத்தில் தேசிய ரீதியில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். அரசியலில் பெண்களுக்கு 25 வீத பங்களிப்புக்காக போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். பெண்கள் மீதான அச்சுறுத்தலுக்கு இன, மத, மொழி, பேதங்களுக்கு அப்பால் குரல் கொடுக்கப்பட வேண்டும். எனது அரசியல் பிரவேசத்திற்கு எனக்கு அரசியல் முன்மாதிரி என்று சொல்வதற்கு யாரும் இல்லை. தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் எமக்கு ஏற்பட்ட வலிகள் தான் எனது அரசியல் பிரவேசத்திற்கு உந்து சக்தியாக இருந்தது. ஆரம்பம் முதலே தமிழரசுக் கட்சி ஊடாகவே எனது அரசியல் பயணம் செல்கின்றது. பெண் அரசியல்வாதி என்ற வகையில் ஆண் அரசியல்வாதிகளுடன் முன்னோக்கிச் செல்வது மிகவும் சவாலான விடயமாகும்.
அரசியலுக்கு வந்துள்ள ஒவ்வொரு ஆண்களும் அரசியலைக் கற்றுக்கொண்டு அரசியல் பின்புலத்துடன் வந்துள்ளார்கள். அரசியல் என்பது ஒருவரின் முதுகின்மேல் ஏறிச் செல்வது தான் என்பதை நான் அரசியலுக்கு வந்த பின்னர் புரிந்துகொண்டேன். ஒரு பெண்ணின் அரசியல் விடயங்கள் குறித்து எவரேனும் அவருடைய கணவரிடம் கதைத்தால், அதாவது நல்லமுறையாகவோ அல்லது விமர்சனமாகவோ கதைத்தால், அந்தக் கணவர் அந்தப் பெண்ணை வீட்டில் ஒழுங்காக முறையாக நடாத்த மாட்டார். அவ்வாறான சிந்தனைப் போக்குள்ள பல ஆண்கள் இருக்கின்றார்கள். சில நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் பெண்களை அரசியலுக்குத் தெரிவு செய்கின்றார்களே ஒழிய பெண்கள் சரியான இடத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களை அரசியலுக்கு தெரிவு செய்வதில்லை.
எனது அரசியல் பயணத்தைப் பொருத்தவரையில் 2011 ஆம் ஆண்டு பருத்தித்துறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டேன் அதன் பின்னர் 2015 இல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன். அது எனது அரசியல் வாழ்க்கையில் திருப்பு முனையாகவே இருந்தது. எமது கட்சியில் போட்டியிட்ட ஒரே ஒரு பெண் வேட்பாளர் என்ற வகையில் அதற்காக வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என நம்பினேன். பிற்பட்ட காலத்தில் பொருளாதார ரீதியில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கினேன். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு தற்போது பருத்தித்துறை நகர சபையில் உப தவிசாளராக இருக்கின்றேன். தேர்தலுக்கும் கட்சி அரசியலுக்கும் இடையிலான பாரிய வித்தியாசங்களை கண்டுகொண்டேன். கட்சி எனக்குரிய இடத்தினை வழங்கி மத்திய குழு உறுப்பினராகவும் மகளிர் அணித் தலைவியாகவும் நியமித்திருக்கின்றார்கள். 2015 தேர்தலின் போது அதற்கான பூரண அனுபவம் இல்லாததோடு வழிகாட்டலும் எனக்கு கிடைக்கவில்லை. ஆளணி மற்றும் செயன்முறைத் திட்டம் என்பவற்றில் பாரிய சிக்கல்கள் காணப்பட்டன. தேர்தலுக்கான நிதியே பெரும் சிக்கலாக இருந்தது. அது ஆறாத வடு என்றே கூறலாம். நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னரே பல விடயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறித்து தொண்டு நிறுவனங்களின் பயிற்சிச் செயலமர்வு௧ள் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. சபையில் உள்ள பெண்கள் முன்மொழிவுகளை முன்வைக்கின்ற போது அவர்களுக்குத் தேவையான ஒத்தாசைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஏதேனும் குளறுபடிகள் இடம்பெறுமாக இருந்தால் அவை குறித்து கேள்வி எழுப்பக்கூடிய அதிகாரம் இருந்தது. சில சந்தர்ப்பங்களில் பெண்களால் சபைகளில் முன்மொழிவுகளை பிரேரிக்கின்ற போது அதைக் கேவலமாக உற்றுநோக்குகின்ற ஆண் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். என்னுடைய அரசியல் அபிவிருத்திப் பணிகளில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமாக இருந்தது. 2011 ஆம் ஆண்டு முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட போது நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதில் போதிய தெளிவு இல்லாமல் இருந்தாலும், பிற்பட்ட காலத்தில் அதற்கான வழிமுறைகளை கையாண்டு அவற்றை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது. அதன் பின்னர் கம்பெரலிய திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு நிதிகளை பெற்றுக்கொள்ள முடிந்தது.
அரசியல் என்றால் என்ன என்பது குறித்த தெளிவொன்று பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். அரசியலில் உள்ள சூட்சுமங்கள், தடைகள், குழிபறிப்புக்கள், என்பன குறித்து பெண்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் இவை தொண்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்படுவது மிகவும் சிறந்தது. முதலாவது அரசியல் பிரவேசத்தின் போது தந்திரோபாயங்கள், மொழித்திறன், ஆளுமை விருத்திகளை வளர்த்துக்கொள்ளல் என்பன குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும். தேசிய, சர்வதேச மொழிகள் மற்றும் தொழில்நுட்ப அறிவு என்பவற்றில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சில விடயங்களை கையாள்கின்ற போது அதில் ஏற்படுகின்ற சிக்கல்களை தீர்த்தல் மற்றும் விடயங்களை நாசுக்காக கையாள்தல் என்பன குறித்த தெளிவு இருக்க வேண்டும். ஒரு பிரச்சினையை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் தைரியம் ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும்.
இலங்கை சட்டத்தின் பிரகாரம் பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற சட்டம் இல்லை. பெண்களுக்காக பிரதிநிதித்துவம் குறித்து எந்தளவு வீதம் இருக்க வேண்டும் என்பது ஆண் ஆதிக்கவாத சிந்தனையுள்ளவர்களின் வெறித்தனமான செயற்பாடு என்றே குறிப்பிட வேண்டும். இந்தப் போக்கை உடைப்பதற்காகவே 25 சதவீத பெண்கள் உள்ளவாங்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அது சட்டமாக்கப்பட்டால் தொடர்ந்தும் 25 சதவீத பெண்கள் மாத்திரமே அரசியலுக்கு உள்வாங்கப்படுவார்கள். பெண்களை புடம்போட்டு அரசியலுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
அடுத்த தேர்தல் என்று வரும்போது பொருளாதாரம் பெரும் நெருக்கடியான ஒரு நிலையாகும். அதேபோன்று பணத்தை வைத்து தேர்தலை பலர் கையாள்கின்றார்கள். அடுத்த தேர்தலில் கட்சி என்னை நிறுத்துகின்ற போது அதில் வலுவாக நிலைத்து நிற்பது என்பது பொருளாதார ரீதியில் பெரும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது. கட்சி பேதமின்றி ஆளுமை இருக்கின்ற பெண்களை எமது சகோதரிகளை அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னெடுத்துச் செல்வதில் என்னுடைய பங்கை முழுமையாக கொடுத்துக்கொண்டிருக்கின்றேன்.
பெண்கள் அரசிலுக்கு பிரவேசிப்பதற்கான ஆளுமைகளை வளர்க்கப்பட வேண்டும். பெண்கள் அரசியலில் சமூகத்தின் பார்வையும் விமர்சனமும் அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அத்தோடு பொருளாதார ரீதியில் வலுப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படக்கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எனது எதிரகால அரசியலில் என்னை நானே நிலைப்படுத்தப்பட வேண்டும். எனது பிள்ளைகளின் நிலைகளை கருத்திற்கொண்டு அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தேவையானவற்றை முன்னெடுத்துவிட்டு நகரலாம் என்று யோசிக்கின்றேன்.One Text Initiative நிறுவனத்தின் பெண் உள்ளூராட்சி அதிகார சபை உறுப்பினர்களது திறன் அபிவிருத்திச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இது தயாரிக்கப்பட்டது – இவ் ஆவணத்தை வெளியிடுவதற்கு மேற்படி உறுப்பினர்களின் அனுமதி பெறப்பட்டது.



