You are currently viewing தமிழ் இளைஞர்கள் கடத்தல் : சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி

தமிழ் இளைஞர்கள் கடத்தல் : சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. 

2008  – 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல்போன நிலையில்,  கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்கள் பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கு ஏற்கனவே இலங்கை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட தடைகளால் தடைப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நேற்யை முடிவு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் அதன் முடிவிற்கான காரணங்களை விளக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை அதிகாரிகள் காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.