You are currently viewing பயங்கரவாதத் தடைச் சட்டம் : இலங்கைக்கு விடுத்த அழைப்பை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து

பயங்கரவாதத் தடைச் சட்டம் : இலங்கைக்கு விடுத்த அழைப்பை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்துவதற்கோ அல்லது அதற்கு மாற்றீடாக புதிய சட்டத்தை உருவாக்குவதற்கோ இலங்கைக்கு விடுத்த அழைப்பை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயத்தில் இலங்கை அரசு விரைந்து செயற்படுவதானது, மனித உரிமை மதிப்புகளுக்கான அர்ப்பணிப்பின், உண்மையான அறிகுறியாக அமையுமென, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களை தடுத்து வைப்பதாகவும், குறிப்பாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞர் ஜசீம் ஆகியோர் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்ளிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இப்போது மனசாட்சியின் படி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டியவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, சில உண்மையான முன்னேற்றங்களை காண விரும்புவதாக அவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான ஒரு வட்டமேசை விவாதத்தின் போது கூறியுள்ளார்.

அமெரிக்கா, இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும், அந்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளை அமெரிக்கா நீண்ட காலமாக ஆதரித்து வருவதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

முழு ஜனநாயகத்தோடு இருக்கும் ஐக்கிய, வலுவான மற்றும் இறையாண்மை கொண்ட இலங்கையை அமெரிக்கா என்றுமே வரவேற்பதாக, அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்ளிட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply