குற்றவியல் நீதித்துறையில் அரசியல் தலையீட்டை ஏற்க முடியாது :SLCC

குற்றவியல் நீதித்துறையில் அரசியல் தலையீடு இடம்பெறுவதனையும், அரசியல் அல்லது ஏனைய காரணங்களின் நிமித்தம் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் ஆட்களை தன்னிச்சையான முறையில் விடுதலை செய்வதனையும் ஏற்க முடியாது என்றும் இலங்கை உடன்பாட்டிற்கான ஒன்றியம் (SLCC) தெரிவித்துள்ளது.

தடுப்புக் காவல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) என்பன தொடர்பாக 2021 ஜூன் மாதம் 24 ஆந் திகதி கருத்தொற்றுமைக்கான இலங்கை உடன்பாட்டிற்கான ஒன்றியம் (SLCC) இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை கீழே :

வழக்கு விசாரணைகள் எவையும் இல்லாமல் பல வருட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததுடன், ஒன்றன் பின் ஒன்றாக வந்த அரசாங்கங்களினால் உதாசீனம் செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சந்தேக நபர்களின் ஒரு குழுவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானம், பொசொன் போயா தினம் அனுடிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும், கொவிட் பெருந்தொற்று எம்மை பாதித்திருக்கும் இந்த நிர்ணயகரமான தருணத்திலும் உலக சமுதாயத்திற்கு பௌத்த தர்மத்தின் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றின் செய்தியை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் முன்னெடுக்கப்பட்ட வரவேற்கத்தக்க ஒரு குறியீட்டுச் சம்பவமாகும்.

மேலும், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைப்பது, சர்வதேச ரீதியில் மரண தண்டனை சட்ட விரோதமாக்கப்பட்டிருக்கும் ஒரு பின்புலத்தில் தேசிய ரீதியிலும், உலகளாவிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

கருத்தொற்றுமைக்கான இலங்கை உடன்பாட்டிற்கான ஒன்றியம்; கீழே கையொப்பமிடும் உறுப்பினர்களாகிய நாங்கள், ஏனைய சம்பவங்கள் தொடர்பாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பாகவும் இதே மாதிரியான ஒரு அணுகுமுறையை சாதகமான விதத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென அரசாங்கத்திடம் வலிந்து கேட்டுக் கொள்கிறோம்.

இதே மாதிரியான நிலைமைகளிலிருந்து வரும் பெரும் எண்ணிக்கையிலான ஆட்கள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் விடயத்தை கவனத்தில் எடுக்கும் நாங்கள், அவர்கள் தொடர்பான சம்பவங்களையும் இதே மாதிரி காருண்யத்துடன் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்து வருகின்றது என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

ஒரு கொலைச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தினால் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டு, அக்குற்றத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தினால் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னைய பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது; ஆனால், இந்தச் செயல், வழக்கு விசாரணைகள் எவையும் இல்லாமல், சந்தேக நபர்களுக்கு எதிராக எத்தகைய சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆட்கள் விடுதலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எவ்விதத்திலும் இணையாக முடியாது என்ற விடயத்தை நாங்கள் குறிப்பிட விரும்புகின்றோம்.

குற்றவியல் நீதித்துறையில் அரசியல் தலையீடு இடம்பெறுவதனையும், அரசியல் அல்லது ஏனைய காரணங்களின் நிமித்தம் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் ஆட்களை தன்னிச்சையான முறையில் விடுதலை செய்வதனையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான தீர்மானம், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்~ அவர்கள் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய ஓர் உரையை அடுத்து இடம்பெற்றுள்ளது.

தான் இதுவரையில் வாழ்ந்திருக்கும் காலத்திலும் பார்க்க அதிக காலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர்களின் இளமைப் பருவத்தின் இழப்பு குறித்து அமைச்சர் அச்சந்தர்ப்பத்தில் கவலை தெரிவித்திருந்தார்.

அதே தினத்ததன்று பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய முன்னைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் 15 வருடங்களுக்கு முன்னர் யுத்த காலத்தின் போது தன்னை படுகொலை செய்ய முயன்ற ஆட்களில் ஒருவர் தான் சிறைவாசம் அனுபவித்த பொழுது சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், அவருடைய வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்படாத நிலையில் அந்த நபர் இன்னமும் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டதுடன், அவரை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதனையும் நாங்கள் இங்கு பாராட்ட விரும்புகின்றோம்.

வழக்கு விசாரணை எவையும் இல்லாமல் ஆட்கள் இவ்விதம் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலை தோன்றுவதற்கான மூல காரணம் பயங்கரவாத தடைச் சட்டமாகும்(PTA). எமது பொருளாதாரத்திற்கு பெருமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வரும் GSP தீர்வைச் சலுகையை இலங்கைக்கு வழங்க மறுப்பது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் இந்தச் சட்டமே மையப் புள்ளியில் இருந்து வந்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் பிடி விராந்துகள் இல்லாமல் ஆட்களை கைது செய்வதற்கு வாய்ப்பளிப்பதுடன், அவ்விதம் கைது செய்யப்படும் ஆட்களை, அரசாங்கம் உடன்பட்டாலேயொழிய, நீதிபதிகளிடமிருந்து பிணையை பெற்றுக்கொள்வதற்கு அறவே வாய்ப்பில்லாத ஒரு நிலையில் வைக்கின்றது. 1979ஆம் ஆண்டில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட காலம் தொடக்கம் தொடர்ந்து து~;பிரயோகம் மற்றும் அநீதி என்பவற்றுக்கான ஒரு மூலமாக இருந்து வந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சந்தேக நபர்களுக்கு எதிராக மட்டுமன்றி, ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தின் போதும், மிக அண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் சந்தேக நபர்களை சிறையில் அடைப்பதற்கும் பயங்கரவாத தடைச் சட்டமே பயன்படுத்தப்பட்டிருந்தது.

மேலும், ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான விதத்தில் அரசியல் அபிப்பிராயங்களை கொண்டிருப்பவர்கள் தொடர்பாகவும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கருத்தொற்றுமைக்கான இலங்கை உடன்பாட்டிற்கான ஒன்றியம் (SLCC) கீழே கையொப்பமிட்டிருக்கும் உறுப்பினர்களாகிய நாங்கள், தண்டனை விலக்குரிமையுடன் கூடிய விதத்தில் து~;பிரயோகங்களுக்கு இடமளித்திருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன், வழக்கு விசாரணைகள் எவையும் இல்லாமல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்புக் காவல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த அருவருப்பான சட்டத்தின் கீழ் நீண்ட காலம் சிறைக் கைதிகளாக இருந்து வருபவர்களை விடுவிப்பது மட்டுமன்றி, இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

நீண்ட கால சிறைக் கைதிகளின் அடுத்த தலைமுறையினராக அவர்கள் தொடரக்கூடாது என்பதே எனது விருப்பமாகும். ஆகவே, இந்தத் தருணத்தில் ஒரு புதிய ஆரம்பம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

அனைத்து இலங்கை வாழ் மக்களினதும் மனித உரிமைகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அது இலங்கைப் பொருளாதாரத்தின் நிலைபேறான தன்மையின் தூண்களில்; ஒன்றாக இருந்து வரும் GSP வரிச் சலுகையை தக்கவைத்துக் கொள்வதற்கு உதவும் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.

கையொப்பமிட்டவர்கள் :

வண. களுபஹன பியரதன தேரர்

அருட் தந்தை சி, ஜி. ஜெயகுமார்

கலாநிதி ஜெஹான் பெரேரா

கலாநிதி ஜோ வில்லியம்

கலாநிதி பி. சரவணமுத்து

பேராசிரியர் ரி. ஜெயசிங்கம்

பேராசிரியர் டியூடர் சில்வா

கலாநிதி தயானி பனாகொட

திரு. வர்ணகுலசிங்கம் கமலாதாஸ்

திரு. சஞ்சீவ விமலகுணரத்ன

செல்வி சாரா ஆறுமுகம்

செல்வி அஸ்ரா நசார்

திரு. விசாகா தர்மதாச

கருத்தொற்றுமைக்கான இலங்கை உடன்பாட்டிற்கான ஒன்றியம் (SLCC) சமூகம், சமயம், கல்விப்புலம் மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனி நபர்களின் ஒரு குழுவைக் கொண்டுள்ளது.

பன்முக இயல்புடன் கூடிய சகவாழ்வு, மனித உரிமைகள் மற்றும் நீதி ஆகிய உயர் இலட்சியங்களுடன் கட்டியெழுப்பப்படும் ஓர் இலங்கைக்கென அவர்கள் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள்.