தடுப்பூசியினால் தடுமாறும் இலங்கை

இலங்கையில் தற்போது கொவிட் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கொவிட் 19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும், அதில் இருந்து மீள்வதற்கும் அரசாங்கத்தின் பிரதான உத்தியாக கொவிட் தடுப்பூசித் திட்டம் முன்னிலைப் பெறுவதாக இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தடுப்பூசி தட்டுப்பாடு

இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்துவதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Astrazeneca தடுப்பூசியின் முதல் சொட்டு, இலங்கையில் சுமார் 9.5 லட்சம் மக்களுக்கு செலுத்தப்பட்டது.

எனினும், இந்த மக்களுக்கு இரண்டாவது சொட்டு தடுப்பூசியை செலுத்துவதில் இலங்கை அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. ஏற்கனவே பெற்றுக்கொண்ட Astrazeneca தடுப்பூசிகளில் 2.5 லட்சம் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பதில்

தடுப்பூசி நெருக்கடி குறித்து வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன பதிலளித்திருந்தார்.

”இரண்டாவது சொட்டு தடுப்பூசியை செலுத்தவதற்கு தற்போது இலங்கையிடம் 2.5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். மீதித் தொகையைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் கொவிட் தீவிரமாக பரவி வருவதால் இந்தியாவிடமிருந்து தடுப்பூசிகளைப் பெற முடியாதிருக்கிறது. இந்தியாவிடமிருந்து Astrazeneca தடுப்பூசியை மேலதிகமாக பெற்றுக்கொண்ட நாடுகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த நாடுகள் பயன்படுத்திய, பின்னர் மேலதிகமாக கையிருப்பில் இருக்கும் தொகையைப் பெற்றுக் கொள்வதில்லை கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நாடுகளுடன் பேச ஆரம்பித்துள்ளோம்.” என்று விளக்கமளித்தார்.

தடுப்பூசியில் கலப்படம் செய்ய முடியுமா?

முதல் சொட்டு தடுப்பூசி Astrazeneca வகையில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது சொட்டு தடுப்பூசியை வேறோரு வகையில் செலுத்த முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாகவும், இதுகுறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுரைகளைக் கோரியுள்ளதாகவும் இலங்கை அமைச்சர் ரமேஸ் பத்திரன மேலும் தெரிவித்தார்.

தடுப்பூசியின் விலை என்ன?

இந்தியாவில் இருந்து பெறப்பட்ட Astrazeneca தடுப்பூசி ஒன்றின் விலை 4 அமெரிக்க டொலர்களாகும். இதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியும் கிடைத்துள்ளது. இந்த தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் இலங்கை மக்களுக்கு செலுத்தப்பட்டது. இன்று வரை 928,107 பேருக்கு இந்த தடுப்பூசியின் முதல் சொட்டு செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு 117,771 பேருக்கு மட்டுமே இரண்டாவது சொட்டு செலுத்தப்பட்டுள்ளது.

Astrazeneca தடுப்பூசி நல்ல பலன் தந்துள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் Sputnik V தடுப்பூசி

ரஸ்யாவில் இருந்து பெறப்படும் Sputnik V தடுப்பூசி ஒன்று சுமார் 10 அமெரிக்க டொலர்களாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் முழுமையான அனுமதியை வழங்கவில்லை. எனினும், ரஸ்யா தவிர்த்த மேலும் 15 நாடுகள் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

முதல்கட்டமாக இலங்கைக்கு 15000 Sputnik V தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இம்மாதம் 6 லட்சம் துடுப்பூசிகளையும், அடுத்த மாதம் 8 லட்சம் தடுப்பூசிகளையும் கொண்டுவர இலங்கை திட்டமிட்டுள்ளதாக அரச ஔடதங்கள் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைத்தவிர ஒவ்வொரு மாதமும் 1.2 மில்லியன் தடுப்பூசிகளை ரஸ்யாவில் இருந்து கொண்டுவர ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Phzer தடுப்பூசி

அமெரிக்காவின் கொவிட் தடுப்பூசியான Phzer பயோ டெக் தடுப்பூசியின் விலை சுமார் 20 டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை எடுத்துச் செல்வது (போக்குவரத்து), களஞ்சியப்படுத்துவது சிரமமான விடயம் என குறிப்பிடப்படுகிறது.

எனினும், இலங்கையின் ஔடத நிர்ணய சபை இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

சீனாவில் தயாரிக்கப்படும் SINOPHARM தடுப்பூசி

சீனாவில் தயாரிக்கப்படும் SINOPHARM தடுப்பூசியின் விலை சுமார் 70 அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனோ, இலங்கையின் ஔடத நிர்ணய சபையோ இந்த தடுப்பூசிக்கு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.

எனினும், 6 லட்சம் SINOPHARM தடுப்பூசிகள் சீனாவில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் ஒரு தொகை தடுப்பூசி, இலங்கையில் உள்ள சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி குறித்து ஆராய்ந்து அனுமதி பெறுவதற்காக இலங்கையின் தேசிய ஒளடதங்கள் நிர்ணய சபை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும், இந்த தடுப்பூசியின் நம்பகத் தன்மை குறித்து ஆராய்ந்த குறித்த குழு இதற்கு இப்போதைக்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த குழுவில் இருந்த ஆறு அதிகாரிகள் நீக்கப்பட்டு, புதிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

முன்னைய குழுவில் இருந்த அதிகாரியொருவரிடம் இதுகுறித்து கேட்டபோது,

”சீனாவில் தயாரிக்கப்படும் SINOPHARM தடுப்பூசி தரம் குறைந்தது என்று நாம் கூறவில்லை. காரணம் சீனாவில் மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. எந்தப் பிரச்சினையும் இல்லை. எனினும், SINOPHARM தடுப்பூசியில் அடங்கியுள்ள தரவுகள் வழங்க மறுக்கின்றனர். உலக சுகாதார ஸ்தாபனம் வழங்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிறுவனம் ஒன்று இதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். இந்த இரண்டும் நடக்கவில்லை. எனவே நாம் இந்தத் தடுப்பூசியை ஆராய்ந்தோம். இதனை முழுமையாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு தடுப்பூசியில் உள்ள தரவுகள் தேவை. அவை எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதனால் முடிவொன்றுக்கு வர முடியாமல் இருக்கிறது.” என்று குறித்த அதிகாரி தெரிவித்தார்.

சீனாவின் SINOPHARM தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்குமா?

சீனாவின் SINOPHARM தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கும் வரை காத்திருப்பதாக இலங்கையின் அமைச்சர் ரமேஸ் பத்திரன செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

” சீனாவில் SINOPHARM தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கும் வரை காத்திருக்கிறோம். 6 லட்சம் SINOPHARM தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அனுமதி கிடைத்தால் 6 லட்சம் மக்களுக்கு இதனை உடனடியாக செலுத்த முடியும்.” என்று தெரிவித்தார்.

முதல் சொட்டு பெற்ற மக்கள் அவதி

இலங்கையில் Astrazeneca தடுப்பூசியின் முதல் சொட்டு பெற்ற மக்கள் இரண்டாவது சொட்டு மருந்தைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து தற்போது தடுப்பூசியைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் இந்த நிலைமை தலைதூக்கியுள்ளது.

இரண்டாவது சொட்டு மருந்தாக வொறொரு வகையை செலுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.

முதல் சொட்டு பெற்ற ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது,

” என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. தடுப்பூசி மட்டுமே விமோசனம். இதனால் தடுப்பூசியை ஆரம்பத்தில் பெற்றுக்கொண்டோம். இரண்டாவது சொட்டு மருந்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாது. முதல் சொட்டு மருந்தை அவசரமாக பெற்றது முட்டாள்த் தனமாக தோன்றுகிறது. அரசாங்கம் இதைவிட பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கையில் மூன்றாவது அலை கொவிட் வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், தடுப்பூசிகளை வழங்குவதிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடன் சுமையினால் திணறிவரும் இலங்கைக்கு இது மற்றுமொரு தலையிடியாக மாறியுள்ளது.