அரசியல் பழிவாங்கல் விசாரணைகள் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் அதிருப்தி

நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்து நடத்தப்படும் விசாரணைகள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் அதன் சகாக்களை, ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து பாதுகாக்க முயற்சிக்கக் கூடாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், சட்டத்தை நடைமுறைப்படுத்த முற்சிக்கும் அதிகாரிகள் மீது வழக்குத் தாக்கல் செய்வதையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த முயற்சியானது நீதித்துறையின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் மேலும் குறைத்து மதிப்பிட வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசேட அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

மனித உரிமை துஷ்பிரயோகங்களில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகளை விடுவிப்பதுடன் அதுபற்றி விசாரிக்கும் பொலிஸ் மற்றும் வழக்கறிஞர்கள் மீது வழக்குத் தொடரவும் எடுத்துள்ள தீர்மானத்தை இலங்கை நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. 

2021 ஏப்ரல் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாயின், அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஸவின் நிர்வாகத்தில் ஏற்கனவே மோசமாக பலம் குன்றியுள்ள நீதித்துறையின் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மேலும் குறைத்து மதிப்பிடுவதாக அமையும்.

மேற்படி தீர்மானமானது, முன்னைய நிர்வாகம் அதன் 2015 – 19 ஆட்சிக் காலத்தில் தனது உறவினர்கள் மற்றும் சகாக்கள் மீது நடத்திய விசாரணைகளை நிறுத்துவதற்காக ஜனாதிபதி ராஜபக்ச? 2020 ஜனவரியில் கொண்டுவந்த அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரிக்கும் விசாரணை ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது போல் அமையும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.

குறியீட்டுடன் கூடிய ஒரு சில மனித உரிமை வழக்குகளில் விசாரணைகளையும், வழக்கு தொடர்வதையும் இடைநிறுத்துவதுடன் கொலைக் குற்றச்சாட்டை தடம்புரளச் செய்யவும், பாரதூரமான ஒழுங்கீனத்துக்குள்ளான பாதுகாப்புப் படை வீரர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளவும், ராஜபக்சவின் குடும்ப அங்கத்தவர்களையும் ஏனையோரையும் மோசடி மற்றும் பணச் சலவை விசாரணைகளில் இருந்து பாதுகாக்கவும் வழி வகுக்கிறது.

இலங்கையின் நீதியில் இருந்து தனது குடும்பம் மற்றும் சகாக்களை நழுவ வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வெட்கக்கேடான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.” என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாக்‌ஷி கங்குலி கூறுகிறார்.

தன்னையே குறிக்கும் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச் செயல்களை மூடி மறைக்க ராஜபக்சவின் நிர்வாகம் எந்த அளவுக்கு செல்லவும் தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறுகிறார்.

2020 முழுவதும், விசாரணை ஆணைக்குழு சட்ட நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டது அல்லது தவறான அபிப்பிராயத்தை தோற்றுவித்தது. ராஜபக்சவின் சகாக்கள் மற்றும் கூட்டாளிகள் ஊழல் குற்றச்சாட்டு அல்லது மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்குகளில்; அது துரிதமாக தலையீடு செய்து, அதன் அதிகாரத்தை மீறுவதாக சட்ட மா அதிபர் தொடர்ந்து குற்றம் சாட்டும் நிலையை அது தோற்றுவிக்கும். 

மனித உரிமைகள் வழக்குகளில் தோற்றிய விசாரணையாளர்களுக்கு எதிராக செயற்படப் போவதாக ஆணைக்குழு அச்சுறுத்தியது. இவ்வாறு அச்சுறுத்தப்பட்ட அதிகாரிகளில் குற்றவியல் விசாரணைப்பிரிவின் முன்னாள் அதிகாரிகளான ஷானி அபேசேகர மற்றும் நிசாந்த சில்வாஆகியோருடன் சட்ட மா அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய பணச் சலவை மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படுவதில் நிபுணத்துவம் பெற்றவர்களும் அடங்குகின்றனர்.  

இந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ஆனால் அது இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது. 

மேற்படி அறிக்கை இந்த நாட்டின் சட்ட ஆட்சியை குறைத்து மதிப்பிடுவதுடன் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கும் அதே நேரம் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடுநிலை மற்றும் சீரான செயற்பாட்டையும் சிதைத்து விடும் என்று சட்டத்தரணிகள் சங்கம் மேலும் கூறியுள்ளது. அறிக்கையில் ஆணைக்குழுவின் சிபாரிசுகள் இடம் பெறுவதை அமைச்சரவை அங்கீகரித்துள்ள நிலையில், அறிக்கையின் பிரதிகள் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி கசிந்தள்ளதாக தெரிய வருகிறது.

ராஜபக்ச அரசாங்கம் தடுப்பதற்கு முயற்சித்த மனித உரிமைகள் வழக்குகளில் 2008-2009 இல் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் அவர்கள் குடும்பத்தினரிடம் இருந்து கப்பம் பெறும் சதி முயற்சியின் ஒரு அங்கமாக கடற்படையின் புலனாய்வு உறுப்பினர்களால் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 11இளைஞர்கள் தொடர்பான வழக்கும் உள்ளடங்குகிறது.  பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் முன்னாள் தலைமைப் பணியாளர் அட்மிரல் (ஓய்வு பெற்ற) ரவீந்திர விஜேகுணவர்தன உள்ளிட்ட முன்னாள் மற்றும் தற்போது சேவையில் உள்ள 14 கடற்படை அதிகாரிகள் கடந்த வருடம் இந்த வழக்கில் தோற்றவிருந்த நிலையில்  அந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஊடகவியளாலர்  கீத் நொயர் 2008 இல் கடத்தி சித்திரவதை செய்யப்பட்ட வழக்கு, 2009 இல் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட வழக்கு, 2010 இல் ஊடகவியளாலர் பிரகீத் எக்நேகலியகொட காணாமற் போனமை தொடர்பான தற்போது நடந்து வரும் வழக்கு, 2012 இல் இடம் பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை வழக்கு. இந்த வழக்கில் பாதுகாப்பு படையினர் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளனர். 

மேற்படி அத்தனை வழக்குகளிலும் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த சாட்சியங்களின் படி  அப்போதைய பாதுகாப்பு செயளாலராக இருந்த புழவயடியலய சுயதயியமய சம்பந்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மூலம் மேற்படி வழக்கின் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டு அதற்கு பதிலாக வழக்கில் பணி புரிந்த பொலிஸார், சட்டத்தரணிகள் மற்றும் சாட்சியமளித்தவர்கள் சாட்சியங்களை இட்டுக்கட்டியதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்படலாம்.

இந்த வழக்குகளில் இடம் பெற்ற அரசியல் தலையீடு காரணமாக நீதித் துறையில் அவை நீண்ட கால தாமதங்களை ஏற்கனவே சந்தித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது. இந்த குற்றங்கள் மற்றும் பாரதூரமான மற்றைய குற்றச் செயல்களுக்கு பொறுப்புக் கூற  இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து முடியாமற் போனதையடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கடந்த மார்ச்சில் தீர்மானமொன்றை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின்படி மனித உரிமைகள் மீறல் தொடர்பான சாட்சியங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்யும் விசாரணை செயல் நிலை  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலய அலுவலகத்துக்கு  பொறுப்பளிக்கப்படுகிறது.

ராஜபக்ச குடும்பத்தினர் முன்னர் 2005க்கும் 2015 க்கும் இடையில்  ஆட்சியில் இருந்தபோது இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பான உயர் நிலை மோசடி வழக்குகளையும் விசாரணை ஆணைக்குழு விசாரித்தது. இந்த வழக்குகளில் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படவேண்டுமென்றும் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகள் சாட்சியங்களை இட்டுக்கட்டியதற்காக  அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட வேண்டுமென்றும் ஆணைக்குழு சிபாரிசு செய்தது. மிக் இராணுவ விமான கொள்வனவு தொடர்பான சந்தேக மோசடி போன்ற சில  மோசடி வழக்குகள்  மனித உரிமை மீறல்கள்  குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவின் பணிப்பாணை இராணுவம், பொலிஸ் மற்றும் பொதுச்சேவையில் உள்ளவர்கள் தொடர்பான வழக்குகளை ஆராய்வதேயாகும். எனினும் ஜனாதிபதியின் கூட்டாளிகள் மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்கள்; தொடர்பு பட்ட  மோசடி மற்றும் பணச்சலவை வழக்குகள் பலவற்றை ஆராயும் வகையில் ஆணைக்குழு அதன் பணிப்பாணையை மீறியிருந்ததாக தெரிய வருகிறது.

பாரதூரமான குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக இலங்கை அரசாங்கம் அதன் கடமைகளை சர்வதேச நீதியின் கீழ் உறுதி செய்யவேண்டும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை செயற்படுத்தவும், பாரதூரமான மனித உரிமைகள் துஷ்பிரயோகம், யுத்தக் குற்றங்கள், மனித நேயத்துக்கு எதிரான குற்றச் செயல்கள், ஆகியவை பற்றிய சாட்சியங்களை சேகரிக்கவும்  மற்றும்  குற்றங்கள் பற்றி விசாரிக்கவுமான சுதந்திர பொறிமுறையொன்றை உருவாக்கவும், அவற்றுக்கு பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரவும்   இலங்கை ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியது.

“ராஜபக்ச அரசாங்கம் அதன் போலியான ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகளை நிராகரிக்க வேண்டும். அதற்குப் பதிலாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ‘மார்ச் தீர்மானத்தை’பாரதூரமானதாக கருதவேண்டும்” என்று கங்குலி கூறுகிறார்.

“ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பின் தொடர்வது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறலுக்கு  பலத்த  பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை அக்கறையுள்ள அரசாங்கங்கள் தெளிவு படுத்த வேண்டும்.

நன்றி தமிழ் இன்போ

Leave a Reply