உழைக்கும் மக்களுக்கான நாள் இன்று

உழைக்கும் வர்க்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள் இன்றாகும். மே தினம் தொழிலாளர்களின் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் வழங்கப்பட்ட நாள் ஆகும்.

உடல் உழைப்பைக் கொண்டு, மனித இயக்கத்திற்கு அடித்தளமாக இருக்கும் உழைப்பாளர்கள், தமது உரிமைகளை வென்றெடுக்க நெடுங்காலம் போராடி வேண்டியிருந்தது. இந்த நீண்ட போராட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததன் அடையாளமாக மே முதலாம் திகதி உழைப்பாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டதை யாவரும் அறிவோம்.

ஊதியம் கொடுப்பதற்காக அவர்கள் கடவுளும் இல்லை ஊதியம் பெறுவன் அடிமையும் இல்லை என்ற ஒரு வாசகத்தை முகநூலில் பார்க்கக் கிடைத்தது. இதுபோன்ற நிலைமை ஆரம்பத்தில் இருந்தபோதிலும் அந்த நிலைமை முற்றாக தற்போது மாற்றமடைந்துள்ளது.

இலங்கையில் மே தினக் கூட்டங்கள்

எனினும், இலங்கையைப் பொறுத்த வரையில், மே தினம் என்பது பேரணி செல்வது, கூட்டம் போடுவது என்ற வழக்கத்தை இரண்டு வருடங்கள் முன்வரைக் கொண்டிருந்தது. கொவிட் தொற்றூ காரணமாக இந்த இரண்டு வருடங்களும் அரசியல் கட்சிகளின் பேரணிகளும் இல்லை கூட்டங்களும் இல்லை.

தொழிலாளர் தினம் என்ற போர்வையில் அரசியல் பலத்தை காட்டுவதற்கும், கூட்டம் சேர்த்து தொழிலாளர் வர்க்கம் எம்மோடு தான் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கும் யார் அதிகமாக கூட்டம் சேர்ப்பது, வேடிக்கைக் காட்டுவது போன்ற பாணியில் தான் இலங்கையில் மே தினப் பேரணிகளும், கூட்டங்களும் நடந்து வந்தன.

ஆனால், இதிலும் ஒரு சில தரப்புக்கள் மட்டும் தொழிலாளர்களை முன்னிறுத்தி இந்தக் கூட்டங்களை நடத்துவதும் அவர் உரிமைகளை தொடர்ந்தும் வலியுறுத்துவதும் காண முடிந்தது.

கொவிட் நெருக்கடியினால் கடந்த வருடமும், இவ்வருடமும் கூட்டங்கள் தவிர்க்கப்பட்டன.

உரிமைகள் வழங்கப்படுகிறதா?

8 மணி நேரம், வாரத்திற்கு ஐந்து நாட்கள் என்று வேலை நேரம் வரையறுக்கப்பட்டாலும், அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளோர் மட்டும் இதனையும் தாண்டி உழைக்கின்றனர். இவர்களில் விவசாயிகள் மட்டும் நேரம், காலம் தெரியாமல் உழைக்கின்றனர்.

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ந்து நின்றாலும் தொடர்ந்தும் தொழிலாளர்கள் நவீன முறையில் சுரண்டப்படுவது மட்டும் குறைந்ததாக தெரியவில்லை.

எட்டு மணி நேரம் மட்டுமா உழைக்கிறோம்?

எட்டு மணிநேர வேலை என்பதன் அடிப்படையில் தொழிலாளர் தினம் முன்னெடுக்கப்படுகிறது. எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை குறிப்பதாகும்.

எனினும், ஏராளமான இடங்களில் 8 மணி நேர பணி, இடைவேளைக்கு 1 மணி நேரம் என ஒன்பது மணி நேரத்தை அலுவலகத்தில் இருக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சில துறைகளில் இது 10 மணி நேரம் 12 மணி நேரம் என நீடித்துச் செல்கிறது. 

இவை அனைத்தும் தெற்காசிய நாடுகளில் அதிகமாக பார்க்க முடியும். மேற்கத்தேய நாடுகளில் இந்த நடைமுறை ஒப்பீட்டு ரீதியில் குறைவாகவே இருக்கிறது. 

எட்டு மணி நேரம் பணியாற்றுகிறார்களா?

தெற்காசிய நாடுகளில் எட்டு மணி நேரம் வேலை என்றாலும், அவர்கள் 8 மணி நேரமும் முழுயாக பணி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால், மேற்கத்தேய நாடுகளில் 8 மணி நேரம் என்பது அதில் முழுமையாக பணியில் ஈடுபட வேண்டும். குறிப்பாக தெற்காசிய நாடுகளின் அரசாங்க நிறுவனங்களில் அரச ஊழியர்கள் மீது இந்தக் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இவர்கள் எட்டு மணி நேரம் முழுமையாக பணிகளைச் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இதனால் தான், இடைவேளை அல்லது உணவு நேரம் என மேலதிகமாக ஒரு மணி நேரத்தை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

சட்டங்கள் என்ன தான் இருந்தாலும் அவை மீறப்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இதன் விளைவால் தான் இன்னும் தொழிலாளர் நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கையும் குறைந்ததாக தெரியவில்லை.

21ஆம் நூற்றாண்டிலும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வுகள் கிடைத்துவிட்டன என்று கூறவிட முடியாது. ஆனால் உரிய அழுத்தங்களும், சரியான நடைமுறைகளும் மனிதாபிமானமற்ற தொழிலாளர் அடக்குமுறைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும்.

பெறும் ஊதியத்திற்கு முழுமையாக உழைப்போம்.

தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் முதலாளி வர்க்கத்திற்கு சவாலாக இருப்போம்.

அனைவரும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்

Leave a Reply