சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணம் : ஓர் அலசல்

பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் சீனாவின் உறவு அதிகரித்து வருகின்றமை மற்றும் சீனா தொடர்பான அமெரிக்காவின் கொந்தளிப்பான போக்கு காரணமாக சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் General Wei Fenghe இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இது ஒரு சாதாரண அமைச்சரின் விஜயம் என்று கூறப்பட்டாலும் கூட, இலங்கையில் உருவாகி வரும் நிலையையும் தெற்காசியா மற்றும் இந்து சமுந்திர பிராந்தியத்தில் இடம் பெறும் நிலையையும் பார்க்கும் போது. சீன பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளுடன், சீனா தனது உறவை விருத்தி செய்து கொண்டு அவற்றை இந்தியாவிடம் நெருங்க விடாமல் விலக்கிக் கொள்வதில் சீனா மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. தனது பட்டுப் பாதைத் திட்டத்தின் கீழ் அமையும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தை நன்கு பயனளிக்கும் வகையில் உபயோகப் படுத்துவதன் மூலம் இதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு சீனா எதிர்பார்த்துள்ளது.

அதே நேரம் மேற்படி நாடுகளுடன் தனது இராணுவ உறவுகளையும் சீனா விருத்தி செய்து வருகிறது. ஆனால் அந்த உறவுகள் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்களவு மட்டத்திலேயே உள்ளன. தற்போதைய நிலையில், ஏகாதிபத்திய நோக்கங்களுடன் கூடிய மேற்குலக நாடுகளைப் போலன்றி தான் ஒரு தீங்கு செய்யாத சக்தி என்றும் மற்றைய நாட்டை கூட்டாகச் சேர்ந்து வளப்படுத்தும் நோக்கத்திலேயே தான் செயற்படுவதாகவும் காட்டிக் கொள்ள சீனா முயற்சி செய்கிறது.

இந்நிலையில் இந்து மற்றும் பசுபிக் கடல் பிரதேசங்கள், சீனாவின் மேலாதிக்கத்துக்குள்ளாவதை தடுக்க அமெரிக்காவின் தலைமையில் இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஒரு நாற்கோண சக்தியாக உருவெடுத்துள்ளன.

தன்னிடம் இருந்து உதவி பெறும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை அடிமைப்படுத்திக் கொள்ளும் நோக்கில் கடனுதவி வழங்கும் சீனாவின் ஏகாதிபத்திய திட்டமே அதன் பட்டுப் பாதை திட்டமென்றும் அதன் பின் தனது இராணுவ பலத்தினால் அடிபணிய வைப்பதை வலுப்படுத்துவதே சீனாவின் நோக்கமென்றும் மேற்படி நாடுகள் கூறி வருகின்றன.

அதே நேரம் தங்கள் இராணுவ பலத்தினால் சீனாவை பலமிழக்கச் செய்ய மேற்குலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. சீனா அதன் முழு இராணுவ பலத்தையும் பயன்படுத்தும்; தென் சீனக் கடலைப் பொறுத்தவரை இந்த உபாயம் ஏற்றதாக அமையலாம். ஆனால் இந்து சமுத்திர பிரதேசத்தைப் பொறுத்தவரை சீனாவின் தலையீடு இராணுவ ரீதியிலன்றி பெரும்பாலும் பட்டுப் பாதை திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியிலேயே அமைந்துள்ளது.

எவ்வாறெனினும் இந்து சமுத்திர பிரதேசம் மற்றும் தெற்காசியாவைப் பொறுத்தவரை மேற்படி நாற்கோண நாடுகள் மற்றும் இந்தியாவுடனான எல்லை மற்றும் இறைமைப் பிரச்சினை காரணமாக நேபாளம் மற்றும் இலங்கையில் சீனா அதன் இராணுவ உறவுகளை கட்டியெழுப்பி வரும் அதே நேரம் பாகிஸ்தானுடன் இருந்து வந்த பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை 2020 டிசம்பரில் மேலும் வலுப்படுத்திக்கொண்டது. அந்த நாடுகளுக்கு சீன பாதுகாப்பு அமைச்சர் General Wei Fenghe விஜயம் செய்திருந்தார். இதன் தொடர்ச்சியாகத்தான் இம்மாத இறுதியில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கிறார்.

இலங்கை அரசாங்கம் 1990 களில் பிரிவினைவாத தமிழீழப் புலிகளுடன் யுத்தம் செய்து வந்தபோது வேறு எந்த நாடும் இலங்கைக்கு உதவ முன் வராத நிலையில் சீனா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய முன்வந்தது. ஆயுத விற்பனையுடன் இராணுவ கூட்டுறவும் வழங்கப்பட்டது. ஆனால் இந்த இராணுவ கூட்டுறவு யுத்தம் முடிவுற்ற பின்னர் நிறுத்தப்பட்ட போதிலும் 2019 இல் சீனா புதுப்பிக்கப்பட்ட போர்க் கப்பலொன்றை இலங்கைக்கு பரிசளித்தது. இதன்மூலம் அதன் உறவுகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. எனினும் திருகோணமலையில் விமானங்களை திருத்தும் வசதிகளை ஏற்படுத்த சீனா எடுத்த முயற்சி இந்தியாவின் தலையீட்டால் தடுக்கப்பட்டது.

2014 இல் சீன நீர்மூழ்கிக் கப்பலொன்றின் இலங்கைக்கான இரகசிய விஜயமொன்று இந்தியாவை ஆத்திரமூட்டியதால் இந்திய – இலங்கை உறவுகள் சிக்கலாகின. இதனையடுத்து இலங்கை மண்ணில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவ தளமும் அனுமதிக்கப்படமாட்டாது என்பதுடன் அதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படாது என்றும் இந்தியாவுக்கு இலங்கை வாக்குறுதி வழங்கவேண்டியிருந்தது. இந்தியாவுடன் இணைந்து கடற்படை ஒத்திகைகளை நடத்துவதுடன் இந்தியாவின் நிர்ப்பந்தத்தால் இந்து சமுத்திர கடற் பாதுகாப்பை கூட்டிணைக்க செயலகம் ஒன்றை அமைப்பதற்கும் இலங்கை ஒப்புதல் வழங்கியது.

எவ்வாறெனினும், பலமான நாடுகளுக்கிடையிலான இராணுவ முரண்பாடுகளில் சிக்கிக் கொள்ள இலங்கை விரும்பவில்லை.

“நாற்கோண நாடுகளில் நடைபெறும் விடயங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாற்கோண நாடுகள் உண்மையிலேயே எமக்குத் தேவையா? நாற்கோண நாடுகள் பனிப்போருக்கு வழி வகுக்குமா? குறைந்த பட்சம் இந்து சமுத்திரத்தில் ஒரு குளிர் போருக்காவது? இவைதான் எமது சில கவலைகள். மேற்படி நாற்கோண நாடுகள் ஒரு தனிப்பட்ட இராணுவ கூட்டணியாக உருவெடுப்பதை நாம் காண முடிகிறது. அதுதான் இங்கு உள்ள பிரச்சினை. நாற்கோண நாடுகளின் நோக்கம் பொருளாதார மீட்டுயிர்ப்பித்தலுக்கு வழியமைப்பதாயின் இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று 2020 அக்டோபரில் இலங்கையின் வெளிநாட்டு செயலாளர் Adm.Prof. Jayanath Colomboge கருத்தரங்கொன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு அறிவிக்காமல் அமெரிக்க யுத்தக்கப்பலொன்று அண்மையில் இந்திய பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் நுழைந்த சம்பவம் ‘கடற்பயணத்தின் சுதந்திரத்தை’ எடுத்துக் காட்டிய போதிலும். அது இந்தியாவுக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் அக்கறை கொள்ள வேண்டிய விடயமாகும். இந்நிலையில் பலம் மிக்க சக்திகளுடனான இராணுவ மோதலொன்றுக்குள் இலங்கையை இழுப்பதற்கு அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட வேறு சக்திகள் ஒருதலைப்பட்ச முயற்சிகளில் இறங்கக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.

இலங்கையுடனான சீனாவின் உறவுகள் எப்படியிருந்த போதிலும், சீன பாதுகாப்பு அமைச்சரின் எதிர்வரும் இலங்கை விஜயம் பெரும் பாலும் பொருளாதாரம் மற்றும் அபிருத்தி நிதியுதவி தொடர்பானதாகவே இருக்கும். அதே நேரம் இந்து சமுத்திரத்தில் இடம் பெறக்கூடிய மோதல்களின் தன்மையைப் பொறுத்தே மேம்படுத்தப்பட்ட இராணுவ கூட்டுறவு எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.

500 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதி வழங்கும் வசதிக்கான ஒப்பந்தம் ஒன்று, சீன அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை நிதி அமைச்சுக்குமிடையே கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி பீஜிங்கில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. கொவிட் 19 நோய்த் தொற்றலின் பின் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த வெளிநாட்டு நிதி தொடர்பான இரண்டாவது தொகுதியே இதுவாகும்.

இலங்கையின் தற்போதைய நிதி நிலமை மற்றும் கொவிட் 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடும் நெருக்கடி காரணமாக இந்த நிதியை இலங்கை கேட்டிருந்தது. இந்த நிதியுதவி பத்து வருட முதிர்ச்சிக் காலத்தை (மூன்று வருட சலுகை காலத்தை உள்ளடக்கியது). இது இலங்கைக்கு வழங்கப்படும் நீண்ட கால வெளிநாட்டு நிதி வசதி ஆகும். இந்த நிதிக்கான செலவு மிகுந்த போட்டித்தன்மை கொண்டதாகும். முதலாவது வெளிநாட்டு கால நிதி வசதியும் இதே செலவுத் தொகையுடன் கூடியது என்று சீன தூதரகம் கூறியது.

இதற்கு முன்னர் 2021 மார்ச்சில் சீன மற்றும் இலங்கை மத்திய வங்கிகள் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இருதரப்பு நிதி மாற்றத்தை செய்து கொண்டன. மூன்று வருடங்களுக்கு செல்லுபடியான இந்த நிதியுதவி இரு தரப்பு வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் பொருளாதார சமூக அபிவிருத்தி திட்டங்களில் நேரடி முதலீட்டுக்கும் பயன்படுத்தப்படும்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இம் மாத சிங்கள தமிழ் புதுவருடத்துக்கான தனது செய்தியில், சீன நிதியுதவியில் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவை உறுதியான பயன்களை தொடர்ந்து எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மேற்படி இரண்டு திட்டங்களும் புதிய என்ஜின்கள் போன்றவை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

“சீன ஜனாதிபதி Xi Jin ping மற்றும் இலங்கை ஜனாதிபதி Gotabaya Rajapaksa ஆகியோருக்கிடையே இரண்டு முறை தொலைபேசி கலந்துரையாடல்கள் இடம் பெற்றிருந்தன. இவை சீன-இலங்கை உறவுகளில் எதிர்கால அபிவிருத்திக்கான மூலோபாய வழிகாட்டலை வழங்கியிருந்தது” என்று கடந்த மார்ச் மாதம் இடம் பெற்ற கலந்துரையாடலொன்றின் போது Qi கூறியிருந்தார்.”சீனாவும் இலங்கையும் முக்கிய கூட்டுறவு பங்காளிகள்” என்று Xi Jinping வலியுறுத்தியிருந்தார்.

“பல்வேறு சர்வதேச மன்றங்களில் எமது இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு வழங்கியும் கூட்டுறவுடனும் செயற்பட்டு சர்வ தேச நேர்மை மற்றும் நியாயப்படுத்தலை ஆதரித்து வந்துள்ளதுடன் இரு நாடுகளினதும் மற்றும் ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளினதும்; பொதுவான அக்கறைகளை பாதுகாத்தும் வந்துள்ளதாக தூதுவர் Qi சுட்டிக் காட்டியுள்ளார். சீனா இலங்கைக்கு 6 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்தை வழங்கியுள்ளது. எனினும் இலங்கை விற்பன்னர் குழு கேட்டிருந்த தொழில்நுட்ப தரவுகளை சீனா இதுவரை வழங்காததால் அவற்றின் பாவனை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளில் சீனாவுடன் கூட்டுறவுடன் செயற்பட இலங்கை விருப்பத்துடன் இருப்பதாகவும், அதன்பின் மெதுவாக பிரபல திட்டங்களான கொழும்பு துறைமுக திட்டம் வரை அதனை விஸ்தரிக்கலாமென்றும் அவரது தொலைபேசி உரையாடலின்போது இலங்கை ஜனாதிபதி Gotabaya Rajapaksa “சீன ஜனாதிபதி Xi Jinping யிடம் கூறியிருந்தார். மேற்படி தொலைபேசி கலந்துரையாடலையடுத்து நீண்ட காலம் தாமதமாகியிருந்த கொழும்பு துறைமுக நகரத்தின் சர்வதேச வர்த்தகம் சார்ந்த சட்டங்களின் புதிய தொகுதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும். எனினும் இவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது எளிதாக இருக்காது. ஏனெனில் மேற்படி சட்டங்கள் வறிய நாடொன்றில் சலுகையுடனான தீவொன்றை உருவாக்கும் என்றும் அதனால் இலங்கையின் இறைமைக்கு மோசமான பாதிப்பு ஏற்படும் என்றும் இலங்கை தேசியவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். கொழும்பு துறைமுக நகரமானது இலங்கை மண்ணில் சலுகையுடன் கூடிய சீனாவின் காலனியாக மாறும். ஏனெனில் சீனக் கம்பனிகள் மாத்திரமே அங்கு முதலீடு செய்யும் (சீனாவுக்கும் அங்கு இடம்பெறும் அதன் திட்டங்களுக்கும் மேற்குலக முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில்) என்று இடது சாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கூறுகிறது.

Leave a Reply