தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு புனர்வாழ்வு

மதத் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றஞ்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையெழுத்திட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத்தைத் தடுக்கும் தற்காலிக ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டமூலத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிப்பது குறித்த ஒழுங்குவிதிகள் இந்த வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியின்படி, பொலிஸ் அதிகாரியொருவர் இல்லாத ஒரு நபரிடம் சரணடையும் அல்லது கைதுசெய்யப்படும் நபர் ஒருவர், சரணடைந்து 24 மணி நேரத்திற்குள், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கைதுசெய்யப்படும் அல்லது சரணடையும் நபர் குறித்து குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, விசாரணைகளை நடத்தி துறைசார் அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விசாரணைகளுக்கமைய குறித்த நபர் குற்றம் இழைத்திருப்பது உறுதிசெய்யப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காக குறித்த விபரங்கள் சட்டமா அதிபருக்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சரணடையும் அல்லது கைதுசெய்யப்படும் நபரின் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்குப் பதிலாக, புனர்வாழ்வு நிலையமொன்றில் புனர்வாழ்விற்குட்படுத்துவது உகந்தது என சட்டமா அதிபர் கருதினால், சட்டமா அதிபரின் எழுத்துமூல இணக்கத்திற்கமைய, குறித்த நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புரிந்த குற்றங்களைத் தவிர, வேறு குற்றங்களைச் செய்துள்ளாரா என்பதை ஆராய்ந்த பின்னர், ஒரு வருடத்திற்கு மேற்படாத வகையில் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைத்து புனர்வாழ்வளிக்க நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்படும் நபர் அல்லது கைதுசெய்யப்படும் நபர், புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரியின் அனுமதியுடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தமது பெற்றோர், உறவினர்களை சந்திக்க முடியும் என்று தற்போது வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply