இனவெறி தாக்குதலுக்கு ஆளானேன்; உயிர் வாழவே விரும்பவில்லை – அதிர்ச்சி அளித்த மேகன்

தன்னுடைய அப்பா தன்னுடன் பேசுவதில்லை என்றும், தன் குடும்பத்திற்கான நிதியை முற்றிலுமாக நிறுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இளவரசர் ஹாரியின் மனைவி மேகன், இங்கிலாந்தின் ராயல் குடும்பத்தினர் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

ஹாரி மற்றும் மேகனுக்கு பிறந்த குழந்தை எவ்வளவு கறுப்பாக இருக்கும் என்று தங்களின் கவலையை அவர்கள் வெளிப்படுத்தியதாக கூறி இனவெறி தாக்குதலுக்கு தன்னை ஆளாக்கியதாக டெல் ஆல் டெலிவிசன் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.

39 வயதாகும் மேகனின் தாயார் கறுப்பின பெண்மணி ஆவார். அவருடைய தந்தை வெள்ளை நிறத்தவர். திருமணத்திற்கு முன்பு வெள்ளந்தியாக இருந்ததாக குறிப்பிடும் அவர் 2018ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்திற்கு பின்பு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை வளர்த்ததாகவும், கேட்ட உதவிகள் கிடைக்கப்பெறதா காரணத்தால் தன்னை காயப்படுத்திக் கொள்ள முயன்றதாகவும் அவர் கூறினார்.

ஒரு வயதாகும் மேகன் – ஹாரி தம்பதியினரின் மகன் ஆர்க்கிக்கு, அவருடைய நிறம் குறித்த சந்தேகம் காரணமாக இளவரசர் பட்டம் தரவில்லை என்றும் கூறியுள்ளார். பக்கிங்காம் அரண்மனை இதற்கு எதிராக எந்தவிதமான கருத்தினையும் இதுவரை முன்வைக்கவில்லை. வின்ஃப்ரேவுடனான உரையாடல் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கபப்ட்ட உரையாடலாகும். 1995ம் ஆண்டு ஹாரியின் மறைந்த தாயார் இளவரசி டையானா, சார்லஸுடன் நடந்த திருமணம் குறித்து மனம் திறந்தார். விண்ட்ஸோர் மாளிகையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருமணம் குறித்தும் அதற்கு பின்பு அந்த மாளிகையில் உள்ள நபர்களின் நடவடிக்கைகள் குறித்தும், இனவெறி தாக்குதல் குறித்தும் அவர் பேசினார். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஹாரியின் அண்ணி கேட், மேகனை அழ வைத்தார் என்றும் கூறியுள்ளார்.

வெளிப்படையாக விமர்சனத்திற்கு ராஜகுடும்பம் ஆளாக்கப்பட்டாலும், மேகன் நேரடியாக எலிசபெத் மீது விமர்சனங்கள் எதையும் முன் வைக்கவில்லை. தன்னுடைய குரல் அமைதியாக்கப்பட்டது என்றும், மிகவும் மன உளைச்சலில் இருந்த போது உதவ யாரும் முன்வரவில்லை. எனவே நான் மிகுந்த பயத்திற்கு ஆளானதோடு மட்டும் அல்லாமல் வாழவே பிடிக்கவும் இல்லை என்று அழுதபடி பேசிய மேகனுக்கு ஆறுதலாக இருந்தார் ஹாரி.

ஜனவரி 2020ம் ஆண்டு ஹாரியும் மேகனும் அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். ஆரம்பத்தில் இதற்கு பதில் ஏதும் அரச குடும்பம் தரப்பில் இருந்து வரவில்லை என்ற போதிலும், அவர்களின் பிரிவு நிரந்தரமானது என்று பக்கிங்காம் அரண்மனை உறுதி செய்தது. தற்போது இந்த தம்பதியினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

போதுமான புரிதல்கள் இல்லாத காரணத்தால் அரச பொறுப்புகளில் இருந்து வெளியேறிதாக கூறிய ஹாரி, தன்னுடைய தாய்க்கு நடந்த அதே நிலைமை தன்னுடைய குடும்பத்தினருக்கும் நடக்கும் என்ற பயம் இருந்த காரணத்தால் தான் வெளியேறியதாக கூறினார். அவருடைய தாய் டயானா இருந்திருந்தால் என்ன கூறியிருப்பாரென்று கேட்ட போது, இப்போது உயிருடன் இருந்தால், தற்போது இருக்கும் நிலைமை குறித்து மிகவும் கோபம் அடைந்திருப்பார் என்று கூறினார். மேலும் தன்னுடைய அப்பா தன்னுடன் பேசுவதில்லை என்றும், தன் குடும்பத்திற்கான நிதியை முற்றிலுமாக நிறுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

Leave a Reply