ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இனி இலங்கை மறக்கவேண்டியது தானா? ஒப்பந்தத்தை சீனாவால் 198 ஆண்டுகளுக்கு நீடி

முன்னாள் அரசாங்கம் இழைத்த தவறுகாரணமாக 99 வருடகால குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 198 ஆண்டுகளுக்கு நீடிக்க கூடும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை மேற்கோள் காட்டி சீனாவின் South China Morning Post பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.  

துறைமுக ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீள்பார்வைக்குட்படுத்துகின்றது என வெளியான தகவல்களையடுத்தே இலங்கை வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும்  அந்தச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிடம்பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வழியின்றி முன்னைய மைத்திரி-ரணில் ‘நல்லாட்சி’ அரசாங்கம்  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 99வருட குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. 

2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஸ தாம் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் தமது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக 2017ல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீள் பார்வைக்குட்படுத்தப்போவதாக அறிவித்திருந்தபோதும் சீனத் தரப்பினர் வெளிப்படுத்திய எதிர்ப்பை அடுத்து ஒப்பந்தத்தை மீள்பார்வைக்குட்படுத்தும் திட்டமில்லை என சில நாட்களிலேயே கூறியிருந்தார். 

இருந்தபோதும் பெப்ரவரி 6ம்திகதி சிலோன் டுடே பத்திரிகைக்கு வழங்கியிருந்த நேர்காணலில் ஜனாதிபதி கோட்டாபய ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை மீள்பார்வைக்குட்படுத்தவுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்திருந்தார். 

இந்தத் துறைமுகத்தில் இருந்து இலங்கை எதனையுமே பெற்றுக்கொள்ளவில்லை என கூறியிருந்த தயா ரத்னாயக்க சீன அதிகாரிகளோடு நடத்திய பல சுற்று கலந்துரையாடல்களை அடுத்து சீனாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதியிலிருந்த கடற்படைத்தளத்தையும் வேறிடத்திற்கு மாற்றிவிட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார். 

நேற்று பெப்ரவரி 20ம்திகதி சனிக்கிழமை சிலோன் டுடே பத்திரிகைக்கு  கருத்துவெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன “முன்னைய அரசாங்கம்,  2015ம் ஆண்டு பதவிக்கு வந்ததையடுத்து ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை இரத்துச்செய்தபின் கடனைக் கட்டவழியின்றி மீண்டும் சீனாவுடன் 2017ல் ஒப்பந்தம் செய்துகொண்டபோது   99 வருட நீண்டகால குத்தகைக்கு வழங்கியது மட்டுமன்றி  அந்த தவணை முடிந்தவுடன் மேலும் 99வருடங்களுக்கு குத்தகைய புதுப்பிக்கக்கூடியவாறான சரத்தையும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளமை பற்றி வெளிவிவகார அமைச்சர் எதனையும் குறிப்பிடவில்லை.

இதனிடையே ஹம்பாந்தோட்டை ஒப்பந்தம் மீள்பார்வைக்குட்படுத்தப்பட்டுள்ளதான செய்திகளை சீனா மறுத்துள்ளது. புதன்கிழமை பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் துறைமுக நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற சமநிலையான தன்னார்வ பேச்சுக்களின் விளைவாகவே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக கூறியுள்ள சீன வெளிவிவகார பேச்சாளர் இந்துசமுத்திரத்தின் போக்குவரத்து கைத்தொழில் மற்றும் இடவசதியேற்படுத்தல் கேந்திர ஸ்தானமாக துறைமுகத்தை மாற்றுவதே நோக்கம் எனச் சுட்டிக்காட்டியிருந்தார். 

சீனாவின் சர்ச்சைக்குரிய ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை அன்றேல் பட்டுப்பாதை திட்டத்தில் ஹம்பாந்தோட்டை முக்கியஸ்தானத்தைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் தென் முனையில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் தெற்காசியாவின் முக்கியமான கடற்பாதைகளுக்கு அருகே அமைந்துள்ளமையால் எதிர்காலத்தில் முக்கியமான கடற்போக்குவரத்து கேந்திரமுனையமாக அமைவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. 

புவிசார் அரசியலில் செல்வாக்குச்செலுத்துவதற்காக சீனா கடன்பொறி இராஜதந்திரத்தின் கீழ் இந்துசமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவமுள்ள இலங்கையிலுள்ள இடங்களை கையகப்படுத்துவதான சர்வதேச அவதானத்திற்கும்  குற்றச்சாட்டுகளுக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தமிழாக்கம்: அருண் ஆரோக்கியநாதர்

Leave a Reply