ஈஸ்டர் தாக்குதல் நடந்த முதல் சில நாட்களில் கத்தோலிக்க பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் செயற்பட்ட விதமே இந்த நாட்டில் பாரிய இரத்தக்களரியைத் தடுத்து நிறுத்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் தாக்குதல்களின் முன்னரும் சில வாரங்களின் பின்னரும் அவர் செயற்பட்ட விதம் தொடர்பாக குறிப்பாக அவரது அரசியல் தெரிவுகள் தொடர்பாக நாட்டிலே கத்தோலிக்கர்கள் உள்ளடங்கலாக பலருக்கும் கேள்விகள் எழுந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இலங்கையில் நாடளாவிய ரீதியில் கத்தோலிக்க ​தேவாலயங்களில் நேற்று  (07) கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டது

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான முறையில் கத்தோலிக்க தேவாலயங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த வேண்டுகோளுக்கு அமைய நேற்றைய தினம் கறுப்பு ஞாயிறு தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

நாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு விசுவாசிகள் அனைவரும் கறுப்பு நிற ஆடையுடன் திருப்பலிகளில் கலந்துகொண்டனர்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துவெளியிட்ட கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,

“தாக்குதலின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ளவே இந்த ஆணைக்குழுவின் மூலம் நாம் எதிர்பார்த்தோம். எனினும் அது தொடர்பில் ஆணைக்குழு எந்தளவிற்கு செயற்பட்டுள்ளது என்பது எமக்குத் தெரியாது. ஆகவே ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையமற்றது என்பதால் தொடர்ந்தும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சேகரித்து தாக்குதலை உண்மையாக வழிநடத்தியவர்கள் யார் என்பதை வௌிக்கொணரவே நாம் முயற்சிக்கின்றோம். ஏனெனில் மக்கள் இதனையே எதிர்பார்க்கின்றனர்.”என  தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உண்மையிலேயே நன்மைபெற்றவர்கள் யார்? தாக்குதலுக்கு யார் தூண்டுகோலாக அமைந்தது?  போன்ற கேள்விகளை எழுப்பும் போது இதற்குப் பின்னணியிலுள்ளவர்கள் யார்  என்பதை ஊகிக்க மேதைகள் தேவையில்லை என்பதை சாதாரண பொதுமக்களுடனான உரையாடல்களின் போது உணர்ந்துகொள்ள முடிந்தது. 

 ஆணைக்குழுக்கள் என்பது பலதடவைகளில் கண்துடைப்பு நாடகங்களுக்கு துணைபோகும் பொறிமுறையாகவே அமைந்திருக்கின்றன என்பது இலங்கையின் கடந்த கால வரலாற்றை அவதானித்தவர்களுக்குத் தெரியும்.

அவ்வாறான ஆணைக்குழுக்கள் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளாக அமைந்தனவே தவிர ஒரு பிரச்சனைக்கோ   விடயத்திற்கோ தீர்வாக அமையவில்லை.

அப்படியிருக்க ஆணைக்குழுக்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து நீதியை கர்த்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட தரப்பினர் உண்மையிலேயே எதிர்பார்த்திருப்பின் அது கானல் நீராகவே முடியும். 

இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதியைத் தேடுபவர்கள் தாம் விரும்பிய ஆட்சியாளர்கள் வரும் போது ஒருவிதமாகவும் தமக்கு விருப்பமில்லாத ஆட்சியாளர்கள் இருக்கும் போது வேறுவிதமாகவும் செயற்படுமிடத்து நீதிக்கான அவர்களின் வேட்கை என்பது கேள்விக்குட்படுத்தப்படும்.

 ஈஸ்டர் தாக்குதல் நடந்த முதல் சில நாட்களில் கத்தோலிக்க பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் செயற்பட்ட விதமே இந்த நாட்டில் பாரிய இரத்தக்களரியைத் தடுத்து நிறுத்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் தாக்குதல்களின் முன்னரும் சில வாரங்களின் பின்னரும் அவர் செயற்பட்ட விதம் தொடர்பாக குறிப்பாக அவரது அரசியல் தெரிவுகள் தொடர்பாக நாட்டிலே கத்தோலிக்கர்கள் உள்ளடங்கலாக பலருக்கும் கேள்விகள் எழுந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

சொந்த விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி சமூகத்தின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட தமது சமூகத்திற்காக இடைவிடாமல் நீதிக்கான போராட்டத்தை தளராது முன்னெடுக்கும் போதே பொறுப்புக்கூற வேண்டும் என்ற எண்ணம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்படும். இல்லையேல் இவர்கள் எமது ஆட்கள் இவர்களைச் சமாளித்துவிடமுடியும் என்ற எண்ணத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்தேவே நடவடிக்கை எடுப்பார்களே தவிர நீதியை வழங்க நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். 

வடக்கு கிழக்கில் போர்க்காலத்தில் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் போது அதற்காக வடக்கு கிழக்கைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்களும் குருக்களும் ஓங்கிக்குரல்கொடுத்த போது கர்த்தினால் மல்கம் ரஞ்சித், அவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தாரா? வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றபோதும் நசுக்கப்படுகின்றபோதும் எத்தனை தடவை கொழும்பைத்தலைமையகமாகக் கொண்ட இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை குரல்கொடுத்திருக்கின்றது அன்றேல் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கின்றது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். 

அநீதி என்பது இலங்கையின் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்டாலோ தெற்கில் நிகழ்த்தப்பட்டாலோ அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் நீதியைக் கோரவும் இனியேனும் கத்தோலிக்க திருச்சபை  இன மொழி பேதம் பாராது ஒரு குடையின் கீழ் முன்வரவேண்டும். அப்போதுதான் நீதிக்கான கோரிக்கையை ஆட்சியளார்களால் தட்டிக்கழிக்க முடியாத நிலை ஏற்படும் .

ஆக்கம் : அருண் ஆரோக்கியநாதர்.

Leave a Reply