சிறைக் கலவரங்களானவை வீட்டுத்துறைசார் விடயமொன்றாக மாறியுள்ளன. பதிவுகளுக்கு இணங்க, 1980 களிலிருந்து ஐந்து சிறைக் கலவரங்களை நாம் கண்டுள்ளோம். இவ்வனைத்து சிறைக்கலவரங்களும் மிகு கொலைகளுடனும் அழிவுடனும் முடிவடைந்துள்ள போதிலும், சிறைச்சாலை நிர்வாகத்தினரினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடுஞ்செயலுக்கு எதிராக கணிசமானளவிற்கு ஏதேனும் பொதுக் கருத்தாடலோ அல்லது உத்தியோகபூர்வமான எதிர்ப்போ எழவில்லை. மீண்டும் நிகழ்வுறாமைப் பொறிமுறைகள் அல்லது சிறைச்சாலை மறுசீரமைப்புக்கள் பற்றிய கலந்துரையாடலே காணப்படாததாக அடையாளப்படுத்தப்பட்ட மற்றுமொரு விடயமாகும்.
1980 ஆம் ஆண்டிலிருந்தான ஐந்து சிறைக் கலவரங்கள் பின்வருமாறு: 1983 ஆம் ஆண்டில் வெலிக்கட (35 மரணங்கள்), 1997 ஆம் ஆண்டில் களுத்துறை (03 மரணங்கள்), 2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெவ (26 மரணங்கள்), 2012 ஆம் ஆண்டில் வெலிக்கட (27 மரணங்களும் 43 காயங்களும்). மிக அண்மைய சம்பவமானது 08 உயிர்களைப் பலியெடுத்தும் 100 இற்கும் மேற்பட்ட கைதிகளைக் காயப்படுத்தியும் மஹர சிறையிலிருந்து தற்போது அறிக்கையிடப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக எமது நாட்டில் சிறைச்சாலைகள் காணப்பட்டுள்ளன. ஆனால் தற்கால சிறைச்சாலை முறைமையானது பிரித்தானியர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைத் திணைக்களமானது கட்டளைச்சட்டம் (1844 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்கச் சட்டம்) ஒன்றின் மூலம் 1844 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. விசாரணையைத் தொடர்வதற்கு, அல்லது மரண தண்டனைக்கு அல்லது நாடுகடத்தலுக்கு, அல்லது தண்டப்பணமொன்று அல்லது கடனொன்று செலுத்தப்படும் வரை காத்திருக்கின்ற ஆட்களை வைத்திருப்பதற்கு சிறைச்சாலைகள் தாபிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மறியற் கைதிகள் என அழைக்கப்படுகின்றனர். சிலவேளைகளில், அரசிற்கு குறித்த அச்சுறுத்தலொன்றை உருவாக்கிய தனியாட்களுக்கு நீண்டதொரு காலப்பகுதிக்கு அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படலாம். அவர்கள் அரசியற் கைதிகள் என அழைக்கப்படுகின்றனர். ஏனையோர் நாட்டின் தண்டனைச் சட்டங்களின் அடிப்படையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளை அனுபவிக்கும் கைதிகள் ஆவர்.
தண்டனையொன்றாக ஆளொருவர் சிறையொன்றுக்கு அனுப்பப்படும் போது, அத்தகைய செயலொன்று எத்தகைய அடிப்படையில் தண்டனையொன்றாக கருதப்பட முடியும்? துரதிஸ்ரவசமாக, எம்மில் பலருக்கு, இவ்வகையான சிறைத் தண்டனைக்குப் பின்னாலுள்ள நியாயப்பாடு எப்போதும் புரிந்துகொள்ளப்படுவதில்லை அல்லது விளங்கவைக்கப்படுவதில்லை. இயல்பில் மனிதன் சமூக விலங்கொன்றாவான் என்பதுடன் சமூகத்தில் சுதந்திரமாக இடநகர்வதற்கான இச்சுதந்திரத்தைப் பறித்தலானது தண்டனையொன்றாக கருதப்பட முடியும் என்பது எம் அனைவருக்கும் தெரியும்.
கைதிகள் நாட்டின் பிரசைகள் ஆவதுடன் அவர்கள் மனிதர்கள் ஆவர். கைதியொருவர் சிறையொன்றில் நலிவுற்றுவருவாராயின், காயத்திலிருந்து விடுபடல் அத்துடன் உயிர்வாழ்க்கைக்கான உரிமையை அனுபவித்தல் போன்ற இரு அடிப்படை உரிமைகளை, சட்டமானது அவற்றை அவர்களிடமிருந்து நீக்கியிருந்தாலொழிய, அனுபவிப்பதற்கு அவருக்கு உரித்துள்ளது. ஆதலால், அவர்களின் இவ்விரு உரிமைகளையும் பாதுகாப்பதற்கு கைதிகளை நோக்கிய பொறுப்பொன்றை அரசு கொண்டுள்ளது.
சட்டத்தில், இப்பொறுப்பானது பாதுகாப்புக் கடமையாக (duty of care) வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. ஏனையோருக்கு காயத்தின் போதுமான அல்லது நிகழத்தக்க விளைவினைக் கொண்டிருக்கக்கூடிய ஏதேனுமொன்றைச் செய்வதை தவிர்க்கும் அல்லது செய்வதிலிருந்து விடுபடும் கடமையாக பாதுகாப்புக் கடமை வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. பாதுகாப்புக் கடமைக்குப் பொறுப்பான எவரும் அப்பொறுப்பினைக் கைவிட முடியாது. கைதிகள் எனும் பட்சத்தில், அப்பொறுப்பினை வகிப்போர் சிறைச்சாலை அதிகாரிகள் ஆவர்.
உயிர்வாழ்க்கைக்கான உரிமையானது பராதீனப்படுத்தவியலாத மனித உரிமையொன்றாகும். சில உரிமைகளும் சுதந்திரங்களும் மனித இருப்பிற்கு அடிப்படையானவை. மனிதனாக இருக்கும் விளைவொன்றாக ஒவ்வொரு ஆளுக்கும் வரும் உள்ளார்ந்த உரித்துக்களாக அவை உள்ளதுடன் ஒவ்வொரு ஆளினதும் கண்ணியத்திற்கான மரியாதை மற்றும் மதிப்பு மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளன. அவை சிறப்புரிமைகளோ ஆட்சியாளர் ஒருவரின் அல்லது அரசாங்கமொன்றின் தற்போக்கெண்ணத்தில் தரப்பட்ட கொடைகளோ அல்ல. ஏதேனும் தன்னிச்சையான தத்துவத்தின் மூலம் அவை அகற்றப்பட முடியாதவை. தனியாள் ஒருவர் ஏதேனும் குற்றத்தினைப் புரிந்துள்ளதால் அல்லது ஏதேனும் சட்டத்தை மீறியுள்ளதால் அவை மறுக்கப்படவோ பறிக்கப்படவோ முடியாதவை.
சட்ட ரீதியில் தமது சுதந்திரத்தை இழந்துள்ள தனியாட்களை சிறைச்சாலைகள் ஏற்றுக்கொள்கின்றன. அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தலும், அத்துடன் கூடுதலான சந்தர்ப்பங்களில், அவர்களை சமுதாயத்திற்குள் மீள விடுவித்தலும் சிறைச்சாலையினதும் சிறைச்சாலை அலுவலர் குழாத்தினதும் பொறுப்பாகும். செய்வதை விட கூறுவது இலகு. சமூகத்தின் சார்பில் தீவிரமான கேள்வியுடையதும் நெருக்கடியானதுமான பணிகளை நடைமுறைப்படுத்துவதை இத்தொழிற்பாடு உள்வாங்குகின்றது. இருந்தபோதிலும், சிறைச்சாலை அதிகாரிகள் சாதாரண நிலமைகளின் கீழும் அதேபோல தீவிரமான சூழ்நிலைகளிலும் தமது கைதிகளை கையாளும் போது மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டு அதேபோன்று சர்வதேச நியமங்கள் பற்றி அறிந்துகொள்வதற்கும், அத்துடன் அவற்றைப் பிரயோகிப்பதற்கும் கடப்பாடுடையவர்கள்.
கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, நாட்டின் சட்டங்களை விட சிறைச்சாலை அதிகாரிகளை வழிநடத்தக்கூடிய மூன்று பிரதான கருவிகள் உள்ளன. இம் மூன்று சர்வதேச ஆவணங்கள் பின்வருமாறு:
1. கைதிகளை நடத்தும் முறைக்கான ஆகக்குறைந்த நியம விதிகள்
2. தடுப்புக்காவல் அல்லது சிறைப்படுத்தலின் ஏதேனுமொரு வடிவின் கீழ் சகல ஆட்களையும் பாதுகாப்பதற்கான தத்துவங்களின் தொகுதி
3. கைதிகளை நடத்தும் முறைக்கான அடிப்படைத் தத்துவங்கள்
தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது சிறைப்படுத்தப்பட்டுள்ள ஆட்களின் உரிமைகளின் பாதுகாப்பிற்கான முழுமையான பாதுகாப்புத் தொகுதியொன்றை இம்மூன்று கருவிகளும் வழங்குகின்றன. 1955 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் நடாத்தப்பட்ட குற்றத் தடுப்பு மற்றும் குற்றவாளிகளை நடத்தும் முறை பற்றிய முதலாவது ஐக்கிய நாடுகள் மாநாட்டின் மூலம் கைதிகளை நடத்தும் முறைக்கான ஆகக்குறைந்த நியம விதிகள் பின்பற்றப்பட்டு, அதன் பின்னர் பொருளாதார மற்றும் சமூக சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. தடுப்புக்காவல் அல்லது சிறைப்படுத்தலின் ஏதேனுமொரு வடிவின் கீழ் சகல ஆட்களையும் பாதுகாப்பதற்கான தத்துவங்களின் தொகுதியானது 1988 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பொதுச் சபையினால் பின்பற்றப்பட்டது. 1990 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பொதுச் சபையினால் பின்பற்றப்பட்ட கைதிகளை நடத்தும் முறைக்கான அடிப்படைத் தத்துவங்களானவை 11 புள்ளி வடிவ (point-form) நியமங்களுடன் பாதுகாப்புத் தொகுதியை முழுமைப்படுத்துகின்றன.
கொவிட்-19 தொற்றிய சிறைக் கைதிகளின் அதிகரித்துவரும் எண்ணிக்கையின் விளைவாக மஹர சிறைச்சாலைக் கலவரம் நிகழ்ந்தது. கைதிகளின் அடிப்படைத் தேவைகளைச் சமாளிப்பதற்கான பற்றாக்குறையான வசதிகளுடன் இலங்கையிலுள்ள கூடுதலான ஏனைய சிறைச்சாலைகள் போன்று மஹர சிறைச்சாலை நெரிசல்மிகுந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக வைக்கப்பட்டிருத்தலானது கொவிட்-19 நோய்த்தொற்றுக்கான இலகுவான இலக்கொன்றினை வழங்குமென கைதிகளுக்கிடையிலான பயமும் விரக்தியும் அத்துடன் பீசீஆர் (PCR) பரிசோதனைகளுக்கு அவர்களை உட்படுத்துமாறு அவர்களினால் மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டிருந்தமையும் கலவரத்தைத் தூண்டியுள்ளதாக நம்பப்படும் காரணங்களில் சில காரணங்களாகத் தோன்றுகின்றன.
சிறைச்சாலைக்குள்ளே கொவிட்-19 நோய்த்தொற்றுக்குள்ளான கைதிகளைத் தடுத்துவைத்தலானது ஏனைய கைதிகளுக்கு இத்தொற்றின் இலகுவான பரவலை விளைவிக்கும் என்பதால் அவ்வாறு தடுத்துவைத்தல் நியாயமற்றதென்று சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கைதிகள் முறைப்பாடு செய்த பின்னர் நிகழ்ந்த துரதிஸ்ரவசமான சம்பவமொன்றே இதுவாகும். குழப்பத்தை முறியடிப்பதற்கு சிறைக்காவலர்கள் துப்பாக்கிச் சூட்டினை நடாத்திய போது எதிர்ப்பானது கலவரமொன்றாக மாறியது. துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 08 பேர் மரணமடைந்து, பல (scores) கைதிகள் காயமடைந்துள்ளனர் என்று தற்போது அறிக்கையிடப்பட்டுள்ளது.
அத்தகையதொரு சூழமைவில், இதே மாதிரியான நிலமையொன்றில் கலவரமொன்றை அடக்குவதற்கு அதிகாரிகளினால் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவதைப் பற்றிக் குறிப்பிடுவது உசிதமானது. அதிகாரத்தைப் பயன்படுத்தலானது வரவிருக்கும் ஆபத்துக்கு ஒத்ததாகவும் அதேபோல கட்டுக்காவலிலுள்ள கைதிகளை நோக்கி தாம் ஆற்றிய கடமைக்கு ஒத்ததாகவும் இருக்க வேண்டுமென்பது சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறையொன்றாகும். சிறைச்சாலை அதிகாரிகளின் நடவடிக்கைகளை மெய்ப்பிப்பதில் அவர்களின் நல்லெண்ணத்தை (bona fides) நிரூபிப்பதற்கு அவர்கள் தவறியுள்ளமையை கடந்தகாலப் பதிவுகளும் அதேபோன்று மஹர சிறைச்சாலைக் கலவரமும் காட்டுகின்றன. இச்சம்பவம் பற்றி விசாரிப்பதும் அதிகாரிகள் தமது கைதிகளை நோக்கிய தமது பாதுகாப்புக் கடமையை மீறியுள்ளனரா எனப் பார்ப்பதும் அரசின் பொறுப்பாகும். இல்லையேல், தண்டனையிலிருந்து விதிவிலக்களித்தல் அடிப்படையில் மோசமான முன்னுதாரணம் ஒன்றை இது உருவாக்கும்.
அரசின் முகவர்களினால் புரியப்பட்ட, அல்லது அனுமதிக்கப்பட்ட (condoned) குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் குறைபாட்டினையே தண்டனையிலிருந்து விதிவிலக்களித்தலானது கருதுகின்றது. சரியான மனித உரிமைக் கண்ணோட்டமொன்றுடன் மஹர சிறைச்சாலை கலவரத்தை விசாரிப்பதற்கு வலுவான தீர்மானமொன்றை இலங்கை அரசாங்கம் எடுக்காதிருப்பின், தண்டனையிலிருந்து விதிவிலக்களித்தல் தொடர்பான இலங்கைப் பதிவின் கடந்தகால எண்ணிக்கைக்குள் இது நிச்சயமாகச் சேரும்.
இச்சூழமைவில், பயனுறுதிவாய்ந்த தீர்வுக்கான உரிமையொன்றை உறுதிப்படுத்துவதற்கு சிறைச்சாலைக் கலவரங்களில் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உத்தரவாதமளித்தல் அரசின் கடமையாகும். இக்கடப்பாட்டின் பகுதியாக, பொறுப்பான அவ் ஆட்களை விசாரணைக்கு கொண்டுவருவதற்குப் பொருத்தமானதாகவிருக்குமிடத்து நடவடிக்கையை எடுத்து, நம்பத்தக்க குற்றச்சாட்டுக்களை பயனுறுதிவாய்ந்த விதத்திலும், உடனடியாகவும், நன்றாகவும் மற்றும் பாராபட்சமின்றியும் புலன்விசாரணை செய்வதற்கான பயனுறுதிவாய்ந்த பொறிமுறையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். சிறைச்சாலைக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்கான சமமான மற்றும் பயனுறுதிவாய்ந்த அணுகுவழியைக் கொண்டிருப்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
