You are currently viewing ஒற்றையாட்சிக்குள் கேலிக்கூத்தாக மாறியுள்ள 13

ஒற்றையாட்சிக்குள் கேலிக்கூத்தாக மாறியுள்ள 13

மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருந்த சுகாதார அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதையே சாவக்கச்சேரி வைத்தியசாலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டம் கேலிக்கூத்தாக மாறியுள்ளது. எனவே, சமஷ்டி அடிப்படையிலான தீர்வே அவசியம் – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

” சாவக்கச்சேரி என்கின்ற பிரபலமான வைத்தியசாலை இன்று உலக அரங்கில் பேசப்படும் இடமாக மாறியுள்ளது. அர்சுனா ராமநாதன் எனும் வைத்தியர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம், செயற்பாடுகள் சரியா, பிழையா என்பதல்ல. ஆனால் மாகாண அரசுக்கு வழங்கப்பட்டிருந்த சுகாதார அதிகாரத்தை மத்திய அரசு எவ்வாறு மீறியது?” – எனவும் சிறிதரன் கேள்வி எழுப்பினார்.

மாகாண சுகாதார பணிப்பாளர் செய்ய வேண்டிய நியமனத்தை எவ்வாறு மத்திய அரசு தனது கையில் எடுத்தக்கொண்டது?

இலங்கை – இந்திய ஒப்பந்தம்மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் வந்தபோது சுதுமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் கூறிய விடயம் இன்று உண்மையாகியுள்ளது. ஒற்றையாட்சிக்குள் அந்த 13 ஆவது திருத்தச்சட்டம் கேலிக்கூத்தாக மாறியுள்ளது.

பொலிஸ் அதிகாரம் இல்லாத ஏனைய அதிகாரம் பற்றி பேசலாம் என ஜனாதிபதி கூறுகின்றார். காணி அதிகாரத்தை எடுத்துக்கொண்டால் தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், கடலோர பாதுகாப்பு திணைக்களம், மகாவலி என பல தரப்புகளும் காணிகளில் கையடிக்கின்றன.” – எனவும் சிறிதரன் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ மக்களை ஏமாற்றும் தீர்வு எடுபடாது, மக்களை ஏமாற்றவும் முடியாது என்பது சாவக்கச்சேரி எழுச்சிமூலம், எண்ணங்கள்மூலம் வெளிப்பட்டுள்ளது. ஆகவே, தமிழினத்தை தேசின இனமாக அங்கீகரித்து சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம். அப்போதே பொருளாதார அபிவிருத்தியும், நிரந்தர சமாதானமும் ஏற்படும்.” – எனவும் சிறிதரன் எம்.பி. இடித்துரைத்துள்ளார்.