You are currently viewing ரணிலின் அடுத்த ‘பிளேன்’ என்ன?

ரணிலின் அடுத்த ‘பிளேன்’ என்ன?

தென்னிலங்கை அரசியல் களத்தில் இன்றளவிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘குள்ளநரி’யாகவே கருதப்படுகின்றார். காத்திருந்து ‘அரசியல்’ வேட்டையாடுதல், கால ஓட்டத்துக்கேற்ப காய்நகர்த்தல் என அரசியலில் அத்தனை அம்சங்களும் அவருக்கு கைவந்த கலை. தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் என்னவென்பது குறித்து தனது விசுவாசிகளுக்குகூட விவரிக்காமல் இரகசியம் காப்பதும் ரணிலின் குள்ளநரி தந்திரங்களில் ஒன்று.

அதனால்தான் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில்கூட குழப்பம் நிலவியது.

எதிர்வரும் ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டு வந்தாலும் அதனை உறுதியாக நம்பும் நிலைப்பாட்டில் எதிரணி உறுப்பினர்களும் இருக்கவில்லை. உள்ளாட்சிசபைத் தேர்தலை காணாமல்ஆக்கியதுபோல ஜனாதிபதி தேர்தல் விடயத்திலும் ஏதேனும் உபாயத்தை அவர் கையாளக்கூடும் என அச்சம் வெளியிட்டிருந்தனர்.

எனினும், உள்ளாட்சிசபைத் தேர்தல் விடயத்தில் கையாண்ட அணுகுமுறையை ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் கையாள முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் அடித்து கூறினார்கள்.

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். அவற்றை அவ்வளவு எளிதில் பெறமுடியாது என்பதால் அந்த தேர்வை ரணில் கையிலெடுக்கமாட்டார் என்பதும் அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.

சிலவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோட்டு பெரும்பான்மையை பெற்றாலும் மக்கள் வாக்கெடுப்பின்போது மக்கள் அதற்கு அனுமதி வழங்காத சூழ்நிலையே காணப்படுகின்றது.

ஜனாதிபதியின் பதவி காலம் ஆறு ஆண்டுகளாக இருந்த நிலையில், நல்லாட்சியின்போது 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அதனை 5 ஆண்டுகளாக குறைத்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி. அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே, ஜனாதிபதியின் பதவி காலத்தை மீண்டும் ஆறு வருடங்களாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு போதும் என சிலர் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் அதனை செய்வதற்கும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறானதொரு பலப்பரீட்சையில் ரணில் ஈடுபட்டால் அது அவருக்கே ஆபத்தாக அமையும் நிலைமையே தெற்கு அரசியலில் காணப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சர்வதேச மட்டத்தில் உயர்பதவி நிலையை எதிர்பார்த்திருப்பவர். எனவே, ஜனநாயக விரோத தலைவர் என்ற பெயரை தற்போது அவர் பெற்றுக்கொள்வதற்கு விருப்பமாட்டார் என்பதால் தேர்தல் நடத்தப்படுவது உறுதி.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ஆதரவை பெறுவதற்கு அவர் முழு வீச்சுடன் செயற்பட்டுவருகின்றார்.

புலனாய்வு பிரிவுகள் ஊடாக களநிலைவரம் எவ்வாறு உள்ளது என அறிக்கைகளையும் பெற்றுவருகின்றார்.
இதன்படி ஜனாதிபதி தேர்தலில் களநிலைவரம் சரியில்லையெனில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் முடிவைக்கூட ஜனாதிபதி எடுப்பதற்குரிய சாத்தியமும் இல்லாமல் இல்லை. படுதோல்வியுடன் அரசியலுக்கு விடைகொடுப்பதைவிட, வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டவர் என்ற நாமத்துடன், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்காமல் ரணில் விடைபெறுவதற்குரிய சாத்தியமும் இல்லாமல் இல்லை.

ஆக ஜுலை 17 ஆம் திகதிக்கு பின்னரே தென்னிலங்கை அரசியல் களத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை ஓரளவு உறுதியாக கணிக்க முடியும். அதன்பின்னரே கட்சி தாவல்களும் ஏட்டிக்குப்போட்டியாக அரங்கேறவுள்ளன.

எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதி முற்படமாட்டார், அதேபோல தேர்தலை சட்டரீதியாக பிற்போடவும் முடியாது. 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கும். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோட்டால் ரணிலுக்கு தமது ஆதரவை மொட்டு கட்சி வழங்கும். அதற்கான ஏற்பாடுகளே தற்போது இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மும்முனை போட்டியே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.