You are currently viewing ஜனாதிபதி தேர்தலுக்கு இடைக்கால தடை உத்தரவுகோரும் மனு தள்ளுபடி

ஜனாதிபதி தேர்தலுக்கு இடைக்கால தடை உத்தரவுகோரும் மனு தள்ளுபடி

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கும்வரை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, விசாரணைகளின்றி முதல் சந்தர்ப்பத்திலேயே குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ பதவிகாலம் முடியும் திகதி தொடர்பில் உயர்நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கும்வரை தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறுகோரி தொழில் முயற்சியாளர் சீ.டி. லெனாவா என்பவரால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவானது இலங்கை அரசியல் களத்திலும் பேசுபொருளாக மாறியது. ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், இதன்பின்னணியில் அரசு உள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.
மேற்படி மனுவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் இடையீட்டு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தன.

எனினும், இதன்பின்னணியில் அரசு உள்ளது என்ற குற்றச்சாட்டை ஆளுங்கட்சியினர் நிராகரித்தனர். ஜனாதிபதியின் பதவிகாலம் ஐந்தாகும் என தான் உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இடைக்கால தடை உத்தரவுகோரும் மனு நேற்று ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஜனாதிபதியின் பதவிகாலம் ஐந்தாண்டுகளாகும் எனவும், அரசமைப்பில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் சட்டமா அதிபர் சார்பில் உயர்நீதிமன்றத்தல் முன்னிலையாகிய பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா உயர்நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டி இருந்தார்.

மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு அவரின் உரிமை மீறப்படவில்லை எனவும், எனவே, மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும், ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும், ஐந்தாண்டுகள் என அரசமைப்பில் கூறப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டி இருந்தனர். மனுவை தள்ளுபடி செய்யுமாறும் கோரினர்.

இறுதியில் விசாரணையின்றி மேற்படி அடிப்படை உரிமை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு கட்டணமாக மனு தாரர் ஒரு லட்சம் ரூபா செலுத்த வேண்டும், ஆறு மாத காலப்பகுதிக்குள் அதனை செலுத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ஜுலை 17 ஆம் திகதிக்கு பிறகு தேர்தல் திகதியை தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்க முடியும்.