You are currently viewing அறவழியில் அரசியல் தீர்வு கோரிய சம்பந்தனின் மறைவும் தமிழர்களின் நிலையும்

அறவழியில் அரசியல் தீர்வு கோரிய சம்பந்தனின் மறைவும் தமிழர்களின் நிலையும்

மிகமுக்கியமான ஒரு காலகட்டத்திலே தமிழர்களுடைய பெரும் தலைவராக இருந்த சம்பந்தன் இனத்தை விட்டுப் பிரிந்திருக்கின்றார். வயது மூப்புக் காரணமாக அவரின் பிரிவு எதிர்பார்க்கப்பட்டதுதான். அண்மைய காலத்தில் இனத்திற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்கவில்லை என்பதும் வாஸ்தவம்தான்.

ஆயினும் அவரது மறைவு தமிழினத் திற்குப் பெரும் இடர்களைத் தரும் நிகழ்வாக மாறப்போவது கண்கூடு. சரியோ, பிழையோ ஐம்பதுகள், அறுபதுகளில் இருந்து நேற்று வரை, ஒட்டுமொத்தத் தமிழினத்திற்காகப் பேசுவதற்கென அடையாளம் காணப்பட்ட ஒரு தலைமைக் குரல் இருந்தது.

நேற்றுடன் அது இல்லை என்பது தான் இப்போதைய யதார்த்தப் புறநிலையாகும். இது மறுக்க முடியாத உண்மை. அறுபதுகளிலே, எழுபதுகளிலே ஒட்டு மொத்த தமிழினத்தின் தலைவராக தந்தை செல்வா இருந்தார். பின்னர் போராளிகளின் எழுச்சி பெறும் காலம் வரை தளபதி அமிர்தலிங்கம் தமிழினத்தின் ஒட்டு மொத்தத் தலைவராக விளங்கினார்.

2009 இல் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட போது, அதுவரை தமிழர் தரப்பின் ஏகத் தலைமைத்துவமாக மதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளினால் அடையாளம் காட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் இனத்தை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றது.

அதன் தலைவராக சம்பந்தன் ஒன்றரை தசாப்த காலம் கோலோச்சினார். இன்று அவர் நம்மை விட்டு பிரியும்போது, எல்லாம் மோசம் அடைந்து விட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இல்லை, தமிழர்கள் ஒரு கட்டுறுதியான கட்டமைப்பிலும் இல்லை.

அதனால் தமிழர்களின் தலைவர் என்று சம்பந்தனுக்குப் பிறகு ஒருவரைத் தனித்து சுட்டிக்காட்டக்கூடிய நிலைமையும் இல்லை என்ற அவலத்தைத்தான் சம்பந்தனின் மறைவு நமக்கு தந்து நிற்கின்றது. அதுதான் உண்மை. யதார்த்தம்.

அந்த அவல நிலைக்கு அப்பாலும் சில பல பிரச்சினைகள் உண்டு. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் போட்டியிட்டு வென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய பத்து எம்.பிக்களையும் இன்று வரை நாடாளுமன்றத்தில் ஓர் அணியாக இயக்குவதற்கு அந்த நாடாளுமன்ற குழுத் தலைவர் என்று பெயரளவிலேனும் சம்பந் தன் இருந்தார்.

நாடாளுமன்றக் குழுவின் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் உட்பட முக்கிய விடயங்களை சம்பந்தனின் சார்பில் சுமந்திரன் எம்.பி. கையாண்டு வந்தார்.

சம்பந்தனின் மறைவுக்கு பின்னர் தற் போதைய நாடாளுமன்றம் எவ்வளவு காலத்துக்கு இயங்கும் என்பது தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தல் இன்னும் நூறு நாள்களில் நடந்து முடிந்த கையோடு இந்த நாடாளுமன்றமும் கலைக்கப்ப ட்டு விடும் என்பதுதான் பொதுவான கள நிலைமையாகும்.

ஆக, இந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் 100 நாள் முதல் ஆகக் கூடியது ஒரு வருடம்தான். எனினும் அதற்கிடையில் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அணியின் புதிய குழுத் தலைவர் யார் என்ற களேபரம் வெடிக்கும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான தகுதி, திறமை, ஆளுமை குறித்தெல்லாம் யாரும் சிந்திக்கப்போவதில்லை.

நாடாளுமன்றக் குழுத் தலைவராகுவதற்காக – அந்தப் பதவிக்காக – எதிரும் புதிருமான தரப்பு கள் எல்லாம் அணி சேரும். நாடாளுமன்றக் கட்சித் தலைவர் களுடைய கூட்டத்தில் விவாதிக்க ஆளுமையற்றோர் தெரிவாகும் வாய்ப்பும் உள்ளது.