You are currently viewing பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிட்டதா?

பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிட்டதா?

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து முற்றாக மீண்டிருக்கின்றது என்று அறிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

இலங்கையின் கடன்களை மறுசீரமைக்க சீனா சம்மதித்ததையடுத்து இந்த அறிவிப்பு ஜனாதிபதியிடமிருந்து வெளிப்பட்டிருப்பதுடன், தன்னுடன் பயணிப்பதா? அல்லது இருளில் அதிகாரத்தைத் தேடிக்கொண்டிருக்கும் எதிர்த் தரப்பினருடன் பயணிப்பதா? என்பதைப் பொதுமக்கள் தான் தீர்மானிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் வரிகளும், விலையேற்றங்களும், வரிசைகளுமே எஞ்சியிருந்தன.

ஒவ்வொருநாளும் ஏதோவொரு பொருளின் விலை சில நூறு ரூபாவால் அதிகரித்துக்கொண்டே சென்றது.
அவ்வாறானதொரு நிலை தற்போது இல்லை என்பது பட்டவர்த்தன மானதே.
ஆனால், இதன் பின்னணியில் இருப்பது ஆக்கபூர்வமான பொருளாதாரச் சீரமைப்பும் பொருளாதார மறுமலர்ச்சியும் தானா என்ற குறைந்தபட்சப் புரிதல் இல்லாமல் இலங்கையர்கள் இல்லை.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு நிரந்தரமாக மீண்டுவர வேண்டுமாயின், இறக்குமதிப் பொருளாதாரத்தை நம்பியிருக்கும் நிலைமை இல்லாமற் செய்யப்பட வேண்டும் என்று நிபுணர்கள் பலரும் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்ற போதிலும், இலங்கைத்தீவு இன்னமும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதாக இல்லை.

மிக இலகுவாகத் தன்னிறைவு காணக்கூடிய துறைகளில் கூட இறக்குமதியில் தவிர்க்க முடியாத்தனம் இருக்கவே செய்கின்றது. ஆக, கடன்களாலும் நன்கொடைகளாலும் நகர்ந்துகொண்டிருக்கும் பொருளாதாரச்சுழற்சியை’ எவ்வாறு ‘பொருளாதார மீட்சி’ என்று கொள்ளலாம்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கோத்தாபயவின் கரங்களில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருந்த இறுதிக் காலங்களில் ‘அரகலய போராட்டம் முழுப் பலம் பெற்றிருந்த நாள்களில்’ இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காணாதமையே பொருளாதாரச் சரிவுக்குப் பிரதான காரணம் என்று பலரும் ஒப்புக்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ரணிலும் கூட இந்தக்கருத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பகிரங்கமாக ஏற்றுள்ளார். ஆனால், நாட்டு மக்களுக்கு நேற்றுமுன்தினம் ஆற்றிய உரையில் ஓர் இடத்திலேனும் இனப் பிரச்சினை தொடர்பில் மறந்தும் ஜனாதிபதி ரணில் தொட்டுப்பார்க்கவில்லை.

இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பிலோ. அதற்கான தீர்வு தொடர்பிலோ அல்லது 13ஆவது திருத்தம் தொடர்பிலோ எந்தவொரு கோடுகாட்டல்களையும் மேற்கொள்ளாமல்தான் ரணில் தன் நீண்ட உரையை நிகழ்த்தியிருந்தார். ஆக, அவருடைய உரை பொருளாதார மீட்சி தொடர்பான தெளிவூட்டலாக அல் லாமல், ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்த அரசியல் சூட்சுமங்கள் நிரம்பியதாகவும், தேர்தலை நோக்கிய காய் நகர்த்தலாகவும் தான் அமைந்திருக்கின்றதே அன்றி வேறில்லை.

நாடு பொருளாதாரத்தில் மீண்டிருக்கின்றது என்றால், கிராமியப் பொருளாதாரங்கள் வளம் பெற்றிருக்க வேண்டும். தனிநபர் பொருளாதாரம் பலப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எந்த மாற்றமும் உணரப்பட்டதாகவில்லை. ஒவ்வொரு தனிமனிதனும் அன்றாடப்பொழுதைப் போக்காட்டு வதை ஒரு போர்முனையாகக் கொண்டிருக்கையில், ‘நாடு மீண்டுவிட்டது, சாதனை செய்துவிட்டேன்’ என்றெல்லாம் ஜனாதிபதி ஜாலம் காட்டுவது அவரது அரசியல் முதிர்ச்சிக்கு ஏற்றதல்ல. கதைத்துக் கொண்டிருப்பது கணக்குப்பிள்ளைக்கு அழகல்ல. கணக்குத்தான் கதைக்க வேண்டும்.