You are currently viewing முடிவுக்கு வருகிறதா ரணில் – ராஜபக்ச உறவு?

முடிவுக்கு வருகிறதா ரணில் – ராஜபக்ச உறவு?

அரசியலில் கோலோச்சியிருந்த காலப்பகுதியில் உறுப்பினர்களை விலைக்கேனும் வளைத்துபோட்டு கட்சிகளை இரண்டாக உடைப்பது – பிளவுபடுத்துவது ராஜபக்சக்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தார்கள், ஜே.வி.பியை பிளவுபடுத்தினார்கள். ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்கூட கை வைத்தார்கள்.

உள்ளாட்சித் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என ஹாட்ரிக் வெற்றியுடன் நாடாளுமன்றத்திலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றிருந்த ராஜபக்சக்கள் அணி, தற்போது அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ளது. இந்நிலையில் அரசியல் ரீதியில் தாம் அநாதைகளாக்கப்படாமல் இருப்பதற்கு அவர்கள் தீவிரமாக போராடிவருகின்றனர்.

ஆனால் ராஜபக்சக்கள் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கவும், தம்மை பலப்படுத்திக்கொள்வதற்காகவும் அவ்வப்போது ஏவிய அரசியல் அஸ்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது ஏவிவருகின்றார்.

அந்தவகையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து பயணித்த – கூட்டணி வைத்திருந்த ஏழு பங்காளிக்கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வளைத்து போட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவதாக மேற்படி கட்சிகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி (கருணா), முற்போக்கு தமிழர் கழகம் (வியாழேந்திரன்) , சுதந்திரக்கட்சி (நிமல் சிறிபாலடி சில்வா அணி) என்பனவே ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.

அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பவற்றின் எம்.பிக்கள் சிலர்கூட ரணிலுடன் இரகசிய உறவு வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல மொட்டு கட்சியின் பிரிவொன்றையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடைத்தெடுத்துள்ளார். இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ரணில் விக்கிரமசிங்க பக்கம் நிற்காத பட்சத்தில் அக்கட்சி மேலும் பிளவடையும் சாத்தியம் காணப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியையும் பிளவுபடுத்துவதற்குரிய வேட்டையை ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார். தற்போதைய சூழ்நிலையில் பொன்சேகா, ராஜித ஆகியோர் ரணிலுடனான உறவை பகிரங்கப்படுத்தி இருந்தாலும் மேலும் சிலர் திரைமறைவு உறவை பேணிவருகின்றனராம்.
அதேவேளை, மொட்டு கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த தேசிய சுதந்திர முன்னணி, பிவிருது ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, யுத்துகம அமைப்பு என்பனவும் மொட்டு தரப்பை கைவிட்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளன.

இதனால் அரசியல் ரீதியில் மொட்டு கட்சி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் கூட்டணி அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

இதற்கிடையில் ரணில் – ராஜபக்சக்கள் உறவு முறியுமா என்ற கேள்வி எழுகின்றது. இன்னும் அந்த கட்டம் வரவில்லையென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ரணிலுக்கும், ராஜபக்சக்களுக்கும் இடையில் அடுத்தவாரம் தீர்க்கமானதொரு சந்திப்பு நடைபெறவுள்ளது. அந்த சந்திப்பின் பின்னரே உறுதியான முடிவுகள் எட்டப்படும்.

நாடாளுமன்றம் ஜுலை 2 ஆம் திகதி கூடுகின்றது. இரு தரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் சபையில் முன்வைக்கப்பட்டு, விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்போது பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி முற்படுகின்றார். அதற்கான நகர்வுகளும் ஆரம்பமாகியுள்ளன. எனவே, இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரும் முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.