You are currently viewing சாதித்துவிட்டாரா ஜனாதிபதி?

சாதித்துவிட்டாரா ஜனாதிபதி?

எதிர்பார்த்தபடி நேற்றிரவு (26) ஜனாதி பதி ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டு மக்களுக்கான உரை முடிந்து விட்டது. வெளிநாட்டுக் கடன் மீளளிப்புத் தொடர்பான மறுசீரமைப்பு ஒழுங்குகள் பற்றிய பல்வேறு விடயங்கள் பொதிந்த அறிவிப்புதான் அது.

கடன் கொடுப்பனவுகள் தொடர்பில் கடன் வழங்கிய தரப்புகளிடம் சற்று கால அவகாசம் பெற்றிருப்பதை தவிர இதில் அவரதும், அவரது அரசினதும் சாதனை என்று ஏதும் அப்படி மெச்சும் படியாக இருப்பதாகத் தெரியவில்லை.

கடன் கொடுத்த தரப்புகள் இலங்கை கடனை மீளளிக்க வக்கற்ற நிலையில் இருப்பதை உணர்ந்து, மீளளிப்புக்குக் கருணைக்காலம் கொடுத்திருக்கின்றார்கள்.

நாடு பொருளாதார நிலையில் தன்னை ஸ்திரப்படுத்தி, உறுதிப்படுத்தி, மூச்சு விடத் தொடங்கிய பின்னர், கடனை மீளளிப்பதற்கு அவை இலங்கைக்கு கருணை காட்டி இருக்கின்றன.
2022 ஏப்ரலில் இலங்கை கடன் மீளளிப்புச் செய்வதை – கடன் கொடுப் பனவுத் தவணைக்குரிய பணத்தைச் செலுத்துவதை – நிறுத்தி இருந்தது.

அதிலிருந்து ஆறு வருடங்களுக்கு – அதாவது 2028 வரை – கடன் மீளளிப்பைத் திரும்ப தொடங்குவதற்கான கால அவகாசமாக உதவும் நாடுகள் ஒன்று பட்டு இணங்கி வழங்கி இருக்கின்றன.

இன்றைய நிலையில் எந்த அரசு இருந்திருந்தாலும் அதனைச் செய்திருக்கும் செய்திருக்க வேண்டும். அதனையே ரணிலின் அரசும் செய்திருக்கின்றது. இதில் அந்த அரசின் சாதனை என்று ஏதேனும் மெச்ச இல்லை. அப்படி ஏதும் இருக்கும் என்றால், இவ்வளவு பின்னடைவுக்கு பின்னரும் இலங்கையை நம்பி மேலும் 4 ஆண்டுகள் விட்டுக்கொடுப்புக் காலத்தை – கால அவகாசத்தை – வழங்கிய சர்வதேச சமூகத்தைத்- தான் பாராட்ட வேண்டும். அதன் இந்த இணக்க சாதனையைத்தான் மெச்ச வேண்டும்.

கடன் மீளளிப்புக்கு சர்வதேச சமூகத்திடம் – கடன் வழங்கிய தரப் புகளிடம் – கால அவகாசம் பெற்று வந்தமை அப்படி ஒன்றும் பெரும் சாதனை அல்ல மெச்சிப் புகழ் வதற்கு. அதற்கு அப்பால், விழுந்து கிடக் கும் நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதில் ரணிலின் அரசு என்ன வெட்டி பிடுங்கி விட்டது என்பதுதான் கேள்வி.

நாட்டை இந்தச் சீரழிவு நிலைக்குக் கொண்டு வந்ததே ஊழல், மோசடி, லஞ்சம், பொறுப்பற்ற நிதிக் கையாள்கை, பொறுப்பு கூறலின்மை போன்ற பின்னடைவுகள்தான். அவற்றை இல்லாமல் செய்வதற் கான எந்தக் காத்திரமான நடவடிக் கையையும் ரணிலின் அரசோ தலைமையோ எடுக்கவில்லை. மாறாக அந்தக் குளறுபடிகளில் ஊற்றுக் கண்களின் தயவில்தான் அவரது அரசு தங்கி நிற்கின்றது.

அவர்களே ரணி லின் அரசைச் சூழ நிற்கின்றார்கள். அரசைக் கொண்டு நடத்துகின்றார்கள். இத்தகைய பின்புலத்தில், உதவும் நாடுகளின் – சர்வதேச சமூகத்தின் – எத் தகைய உதவிகள் கிடைத்தாலும், ஒத் துழைப்புக் கிட்டினாலும், சலுகை கள் வந்தாலும், நாட்டுக்குப் பொரு ளாதார மீட்சி சாத்தியப்படவே போவ தில்லை என்பது தெளிவு.

பொருளாதார நெருக்கடியில் குப்புற விழுந்த இலங்கை, அதினின் றும் மீண்டெழுவதற்காக சர்வ தேச சமூகம் – உதவும் நாடுகள் – நீண்ட கால அவகாசம் வழங்கி உதவ முன் வந்திருப்பது பாராட்டுக் குரியதுதான். ஆனால் அது ரணில் அரசின் கெட்டித்தனமோ, சாத னையோ ஆகிவிடாது என்பதுதான் உண்மை.