You are currently viewing மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதே நல்லிணக்கத்துக்கு வழி

மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதே நல்லிணக்கத்துக்கு வழி

வடக்கு – கிழக்கில் இருந்து படை முகாம்களையும், பொலிஸ் நிலையங்களையும் அகற்றி தமிழீழம் அமைப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்திருக்கின்றார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரனின், கடந்த 18ஆம் திகதிய உரைக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடொன்றையும் அவர் பதிவு செய்திருக்கின்றார்.

கோத்தாபய அரசாங்கத்துக்கு எதிரான ‘அரகலய’ போராட்டக் காலத்தில் மௌனித்திருந்த பௌத்த பேரினவாதம், கடந்த சிலமாதங்களாக அதி தீவிரமாகத் தலைதூக்க எத்தனித்திருக்கின்றது. ஆற்று வெள்ளத்துக்கு இடப்படும் தடைகள், எவ்வாறு அந்த ஆற்றின் நீரோட்டத்தை அதிகரிக்கவும் ஒரு காரணமாக அமையுமோ, அவ்வாறுதான் ‘அரகலய’ காலத்துக்குப் பின்னரான பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரல்கள் அமைந்திருக்கின்றன.

கம்மன்பில, வீரவன்ஸ, வீரசேகர உள்ளிட்ட பலரும் இந்த ‘பௌத்த பேரினவாத’ திணிப்பை – ஆக்கிரமிப்புமனோநிலையை- வெறுப்புணர்வு அரசியலை தம் முழுநேரத் தொழிலாக முழுமூச்சாக முன்னெடுத்துவரும் நிலையில், அக்மீமன தயாரத்ன தேரரும் தன்பங்குக்கு வினையாற்றியிருக்கின்றார்.

நாட்டில் இனித் தேர்தல் காலம். மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல் என்று அடுத்தடுத்து பல தேர்தல்கள் வரவிருக்கின்றன. இவ்வாறான நிலையில், இலங்கையில் தேர்தலின் இலவச இணைப்பான பௌத்த பேரினவாத பரப்புரைகளும்- வெறுப்புணர்வுகளும் அடுத்தடுத்த நாள்களில் இன்னுமின்னும் தீவிரமாக முன்னெடுக்கப்படும். இதில் இரண்டாவது கருத்துக்கோ அல்லது மாற்று நிலைப்பாட்டுக்கோ இம்மியும் இடமில்லை.

13 ஆவது திருத்தம் எப்போதெல்லாம் பேசுபொருளாகின்றதோ, அப்போதெல்லாம் ஏதோ 13ஆவது திருத்தம் தனிநாட்டைத் தருவதுபோன்று, ‘தமிழர்கள் தனிநாடு கோருவதன் அவசியம் என்ன?’ என்று திரும்பத்திரும்ப விசமத்தனக் கேள்விகளையும், இழிநிலை அரசியலையும் முன்னெடுப்பது பௌத்த பேரினவாதப் பேர்வழிகளுக்கு வாக்குகளை அள்ளுவதற்கான மிகச் சுலபமான வழி. அத்தகையோருக்கு தமிழர்கள் தம்மைத் தாமே ஆள்கின்ற உரிமையை -உரித்தை எதற்காகக் கோருகின்றனர் என்பதற்கான பதிலைத்தான் அக்மீமன தயாரத்ன தேரரின் கருத்து மெய்ப்பித்து நிற்கின்றதே அன்றி, அவருடைய கருத்துகளில் தமிழர்கள் அச்சப்படவோ- தயங்கவோ -கிலி கொள்ளவோ போவதில்லை.

ஏனெனில், இலங்கையின் பௌத்த பேரினவாத கடை நிலை வரலாற்றில் அக்மீமன தயாரத்ன தேரர் முதலாம் வரும் அல்லர் – புதியவரும் அல்லர் – கடைசியானவரும் அல்லர்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தென்னாபிரிக்காவைப் பின்பற்றிய ‘நீதிப்பொறிமுறை’ முன்வைக்கப்படும். உண்மையைக் கண்டறியும் அந்த ஆணைக்குழுவின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்று பகல்கனவு கண்டுகொண்டு, சர்வதேசத்துக்குப் பித்தலாட்டம் காட்டிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் அரசியல் தலைவர்கள் ஒரு விடயத்தை உச்சப்புரிதலுடன் அணுகவேண்டும்.

தென்னாபிரிக்கா தன் நாட்டில் இடம்பெற்ற கறுப்பினப் படுகொலைகளுக்கு எதிரான நீதியாக, இனப்படுகொலையாளர்களைத் தண்டிப்பதற்கு முன்னர் ‘மீண்டும் நிகழாமை’ என்பதைத்தான் உறுதிப்படுத்தியது.

இனி இந்த நாட்டில் இவ்வாறு நடக்காது என்ற நம்பிக்கையைத்தான் தென்னாபிரிக்கா முதலில் கொடுத்தது. அதன்பின்னர்தான் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். ‘வடக்கு – கிழக்கில் தமிழீழம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்ற அக்மீமன தயாரத்ன தேரரரின் கருத்து, மீண்டும் பழைய இருண்ட காலம் திரும்பிக் கொண்டிருப்பதையே உணர்த்துகின்றது. இதுவா தென்னாபிரிக்காவிடம் இலங்கை கண்டறிந்த உண்மை? ‘நாய்வாலை நிமிர்த்தமுடியாது’ என்பர் உண்மைதான். புத்தரே சொல்லினும் பேரினவாதிகளின் வாலையும் நிமிர்த்தமுடியாது. நிமிரா வாலுடன் அவர்கள் இனவாதக் குரைப்பை தொடரவே செய்வர்…!