You are currently viewing 13 ஆவது திருத்தச்சட்டம்: பொறுப்பை உணருமா டில்லி?

13 ஆவது திருத்தச்சட்டம்: பொறுப்பை உணருமா டில்லி?

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், இன்று (20) இலங்கை வந்தடைந்தார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தத் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பான பேச்சுகள் தமிழர் தாயகத்தில் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில், கலாநிதி ஜெய்சங்கரின் வருகை, வர்த்தக மூலோபாயத் திட்டங்களுக்கும், அயலுறவுத்துறைக் கொள்கைகளுக்கும் அப்பாற்பட்ட நோக்கங்களைக்கொண்டது என்றே வெளியுலகுக்குச் சொல்லப்படுகின்றது.

ஆனாலும் அதற்கு அப்பால் அரசியல் சார்ந்த பல விடயங்கள் இந்த வருகைக்குப் பின்னே ஒளிந்திருப்பதும் உண்மையே. இந்த நிலையில், அவரின் இந்தப் பயணத்தை, அவருடனான பேச்சுகளை தமிழர் தரப்பு எவ்வாறு கைக்கொள்ளப்போகின்றது என்ற கேள்வியும் எழவே செய்கின்றது.

அண்மையில் நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிய மைத்தது. மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்று வரலாற்றில் தன்னைப் பதிவுசெய்தார்.

ஆனால், மோடியின் அமைச்சரவையில் எந்தப் பெரிதான மாற்றங்களும் நிகழ்ந்ததாக இல்லை. அயலுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கரும், உள்துறை அமைச்சராக அமித்ஷாவும் பதவியில் தொடர்கின்றனர். ஆக, இந்திய அரசின் முகம் அதன் உள்ளகக் கொள்கைகளிலோ அல்லது வெளியகக் கொள்கைகளிலோ மாறப்போவதில்லை என்பதைத்தான் இந்த நியமனங்கள் கட்டியம் செய்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மிகக் கவனமான அரசியல் நகர்வுகளையும், முடிவுகளையும் எடுக்க வேண்டிய இடமும் இதுவே.

கடந்த மாதம் இதே காலப்பகுதியில்தான், பா.ஜ.க. அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடைகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பதாக அறிவித்தது.

“விடுதலைப் புலிகளின் இயக்கம் தமிழ்நாட்டில் இரகசியமாகச் செயற்படுகிறது, அனைத்துத் தமிழர்களுக்குமான தனிநாடு என்ற கோரிக்கையில் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் வலுவாகவே உள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் நோக்கம் எதிரானது, மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அந்த அமைப்பு அச்சுறுத்தலாகவே உள்ளது” என்பனதான் புலிகள் மீதான தடைக்கு இந்தியா கூறும் கற்பிதங்களாக அமைந்திருந்தன.

இதே ஜெய்சங்கரின் அயலுறவுத்துறை நகர்வுகளும், அமித்ஷாவின் உள்ளகக் கொள்கைகளும்தான் புலிகள் மீதான தடைக்கு உடலாகவும் உயிராகவும் அமைந்திருந்தன. எனவே இவ்விருவரையும், நமது இனத்தின் பக்கம் கொஞ்சமேனும் பரிவோடு பார்க்கும் நிலைக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்தலைவர்களின் கைகளிலேயே உள்ளது. ஆனால், எம்மவர்களோ உட்கட்சி குடுமிப்பிடி சண்டைகளிலும், பொதுவேட்பாளரை எதிர்த்து கூட்டங்கள் வைத்து பிரசாரம் செய்வதிலும்தான் முனைப்பாக இருக்கிறார்களே தவிர, குறைந்தபட்சம் இந்தியாவையாவது தமிழினத்தின் பக்கம் கொண்டுவர எந்தவித எத்தனங்களையும் செய்ய மறுக்கிறார்கள்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தத்தை முன்வைத்தது இந்திய அரசே. ஆனால், இந்தத் தீர்மானத்தை இன்றளவும் இலங்கை அரசு இம்மியும் கண்டு கொண்டதாகவில்லை. பலநூறு தடவைகள் 13 ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்துகின்ற போதிலும் மெத்தனப் போக்கையே கொழும்பு பரிசாக வழங்கி வருகின்றது.

இவ்வாறாக ஒரு இருண்மை நிலைக்குள் இருந்தே இந்திய அரசு தமிழர் விடயத்தைக் கையாண்டு வருகின்ற பின்னணியில், பா.ஜ.க. அரசின் இந்த ஆட்சிக் காலத்திலாவது சில விடயங்களில் தீர்க்கம் தேட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு இருக்கவே செய்கின்றது. இனியாவது பொறுப்புணர்வார்களா?