You are currently viewing இலங்கை வரலாற்றில் இருண்ட நாள்!

இலங்கை வரலாற்றில் இருண்ட நாள்!

இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 ஜூன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது. தேர்தல் பாது காப்பு நடவடிக்கைகளுக்காக நானூறுக்கும் அதிகமான பொலிஸார் நாட்டின் பல பாகங்களிலிருந்து யாழ்ப்பாணத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மே 26 அன்று வடபிராந்திய பிரதிகப் பொலிஸ் மாஅதிபர் பி. மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.

1981 மே 31 ஞாயிற்றுக்கிழமை தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியினர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் மாவட்ட சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது அங்கு பொலிஸார் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகினர். துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியவர்கள் யார் எனக் கண்டுபிடிக்கப்படவில்லை. புஞ்சி பண்டா, கனகசுந்தரம் ஆகிய இரு பொலிஸார் உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வை அடுத்து, நாச்சிமார் கோவிலடிக்கும் மற்றும் யாழ் நகரம் எங்கும் பொலிஸாரும், துணை இராணுவக் குழுவினரும் சீருடை அணிந்தவர்களாகவும், சீருடை அணியாதவர்களுமாக விரைந்து அடாவடித்தனங்களில் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களும் தாக்கப்பட்டனர். யாழ் பிரதான வீதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது.

ஜூன் முதலாம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்த அதற்கு அருகிலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங் கேறியது. ஆம், பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத் தியது. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது.

இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப் பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இப்படித்தான். ஹிட்லர் கூட செய்யாத கொடூர உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட – தெற் காசியாவில் சிறந்த நூலகமாக விளங் கிய – யாழ் பொது நூலகம் நள்ளிர வில் பொலிஸாரால் எரிக் கப்பட்டு, அந்தப் பண்பாட்டுப் பேரழிப் புக் கொடூரம் காட்டுமி ராண்டித்தன முகத்தின் கோரத்தை உலகுக்கு அம்பலப்படுத்தும் விதத்தில் அரங்கேறியது.

இன்று நூலகக் கட்டடம் மீளமைக்கப்பட்டு, புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், ஏட்டுச் சுவடிகளும் வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இது 20ஆம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. நூலகம் எரிக்கப்பட்டது தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. தமிழீழ விடுதலை போராட்டம் வீச்சுப் பெற யாழ் நூலக எரிப்பும் ஒரு காரணமா யிற்று. அந்தப் பேரழிப்பின் நினைவு நாள் இன்று.