You are currently viewing சுதந்திரக்கட்சியின் எதிர்காலம்…?

சுதந்திரக்கட்சியின் எதிர்காலம்…?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இழுபறி நடு வீதிக்கு வந்துவிட்டது. இனி, அக்கட்சிக்கு விடிவு யாது, வழி எது என்பதை நீதிமன்றில்தான் முடிவு கட்ட வேண்டி இருக்கும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆசி, ஆதரவுடன் ஒரு குழுவும், இதுவரை கட்சியின் தலைவராக இருந்த மற்றொரு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஓர் அணியும் கட்சியின் நிர்வாக அதிகாரமும் உரித்தும் தங்களுடையதே என்று மல்லுக்கட்டி நின்றாலும், முடிவு விரைந்து கிட்டுவதற்கான சாத்திய கூறுகளே தென்படவில்லை.

ஏற்கனவே கட்சியின் தவிசாளராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள கொழும்பு மாவட்ட நீதிமன்றம், கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவரிடம் இருந்து எந்த வழிகாட்டுதல்களையும் பெறவேண்டாம் என்று கட்சியின் பதில் பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய கட்சி நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த வியாழனன்று இரண்டாவது தவணைக்கு எடுக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டபோதும், கட்சித் தவிசாளராக இயங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக விடுக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீதிமன்றம் விலக்க மறுத்து விட்டது. அது மேலும் 14 நாள்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வழக்குத் தொடர்பிலும், நீதிமன்ற உத்தரவு தொடர்பிலும், எதிராளி தரப்புக ளுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்குமானால், அவற்றை எழுத்தில் சமர்ப்பிக்கும்ப டியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆக, மனுதாரரின் விண்ணப்பம், எதிராளிகளின் ஆட்சேபனை, மனுதாரர் தரப்பு பதில் மனுபோன்ற வற்றையெல்லாம் ஆராய்ந்த பின்னர், ஓர் இறுதி முடிவு எடுப்பதில் நீதிமன்றம் கரிசனையாக இருப்பதாகவே தெரிகின்றது. அதுவரையில் மைத்திரிக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு 14 நாள்களுக்கு ஒரு தடவை நீடிக்கப்படும் சூழ்நிலையே தென்படுகின்றது.

நீதிமன்றின் இடைக்காலத் தடையால் மைத் திரிக்கு தற்காலிகமாக அதிகாரம் இல்லை என்பதை வைத்து, சந்திரிகா தரப்பு கட்சி சு.கவின் பதில் நிர்வாகம் ஒன்றை உருவாக்கி இருக்கின்றது. இதுவரை கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வந்தவர் அந்தப் புதிய நிர்வாகத்தை சட்டரீதியானது என்று ஏற்க முடியாது என்று தெரி வித்துவிட்டார்.

இனி, நீதிமன்றம்தான் விசாரணை நடத்தி முடிவு கட்ட வேண்டும். அதுவரைக் காத்திருக்க முடியாத இருதரப்புகளும், ஒன்றையொன்று முந்தும் நோக்கோடு தத்தமது நியாயங்கள் சகிதம் தேர்தல் ஆணைக்குழுவை நாடி இருக்கின்றன.

ஆனால், தேர்தல் ஆணையம் இதற்குள் தனது தலையைக் கொடுத்துமாட்டிக் கொள்ளத் தயார் இல்லை என்றே தெரி கின்றது. ‘அழுதும் அவளே பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற மாதிரி, ‘இது உங்கள் உள்கட்சிப் பிரச்சினை, நீங்களே தீர்த்துக் கொண்டு வாருங்கள், இதற்கு நடுவில் நாம் தலையிட்டுத் தீர்ப்புக் கூற முடியாது’ என்ற போக்கில் தேர்தல் ஆணைக்குழு கை விரித்து விட்டதாகவும் தகவல்.

விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், அதற்கு முன்னர் தான் தலையிட்டு, ஒரு பக்கத்தை அங்கீகரித்து ஏற்று, இன்னொரு தரப்பை நிராகரித்துத் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காது என்பது திண்ணம். ஒன்றில் கட்சிக்குள் நீங்கள் ஒன்றிணைந்து ஒன்றுபட்டு ஒரு முடிவுடன் வாருங்கள் அல்லது நீதிமன்றுக்கு போய் ஒரு முடிவை – தீர்ப்பை – பெற்று வாருங்கள் என்று தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட இருதரப்புகளுக்கும் கோடி காட்டிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சிக்கலுக்கு நீதிமன்றத்தில் ஒரு முடிவு எட்டப்படுவதற்கு இடையில், அதற்குக் காலம் இழுபட்டு, அதற்கு மத்தியில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுமானால், அச்சமயத்தில் கட்சியின் உண்மையான நிர்வாகிகள் யார் என்பதைத் தீர்மானித்து, அத்தரப்புடன் ஊடாட வேண்டிய நெருக்கடி தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படும். அதுவரையில் எந்தப் பக்கமும் சாராமல், விவகாரத்தை நீதிமன்றத்தில் தீர்த்துவரும் வரை, தேர்தல் ஆணையம் கைய வீசிக் கொண்டு சும்மா பார்த்துக் கொண்டு தான் இருக்கும்.

சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை இனி எல்லாம் நீதிமன்றத்தின் முடிவில் தான் அல்லது வழிகாட்டலில் தான் தங்கி உள்ளது. இம்முறை மே தினத்தைக்கூட உரிய வகையில் நடத்தமுடியுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.